ஜப்பானில் சூறாவளி: 200 கி.மீ. வேகத்தில் காற்றும் கனமழையும்

சூறாவளியின் சேதம்பெருமளவான பொருட்சேதங்களை இந்த சூறாவளி ஏற்படுத்தியுள்ளது

ஜப்பானின் தென்பகுதித் தீவுகளை நியோகுரி சூறாவளி தாக்கிவரும் நிலையில், ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோரை வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையுமாறு அந்நாட்டின் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ஒகினாவா தீவை மணிக்கு இருநூறு கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் வீசும் புயல் தாக்கிவருகிறது. கூடவே அங்கு கன மழையும் பெய்துவருகிறது.

இந்த தீவின் கரையோரப் பகுதிகளை 14 மீட்டர்கள் வரையில் உயரமான கடல் அலைகள் தாக்கலாம் என வானிலை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்த டைஃபூன் சூறாவளி வலுவிழந்து வருகின்றபோதிலும் கடுமையான மழை பெய்துவருவதால், இனியும்கூட திடீரென்ற வெள்ளப்பெருக்குகளும் நிலச்சரிவுகளும் ஏற்படலாம்.

இந்தப் பகுதியில் விமானப் பயணங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன, கடல் பாதைகள் மூடப்பட்டுள்ளன, பல்லாயிரக்கணக்கான வீடுகள் மின் இணைப்பை இழந்துள்ளன.

ஒகினாவா தீவில் உள்ள தமது இராணுவ தளத்திலிருந்து சில விமானங்களை உதவிப் பணிகளில் ஈடுபட அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. -BBC