‘ஆப்கான் அதிபர் தேர்தல் முடிவை நாங்கள் ஏற்க மாட்டோம்’ வேட்பாளர் அப்துல்லா அப்துல்லா அறிவிப்பு

ஆப்கான் அதிபர் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் அப்துல்லா அப்துல்லா அறிவித்துள்ளார். மக்கள் ஓட்டுகளுக்கு எதிராக சதி நடந்திருப்பதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

ஆப்கான் அதிபர் தேர்தல்

அமெரிக்காவில் 2001–ம் ஆண்டு செப்டம்பர் 11–ந் தேதி அதிபயங்கர தாக்குதல்களை நடத்தி 3 ஆயிரம் பேரை கொன்று குவித்த அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் தலீபான் அரசு அடைக்கலம் தந்தது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்து தலீபான்களின் ஆட்சியை வீழ்த்தி, ஹமீது கர்சாயை அதிபராக அமர்த்தியது. அதைத் தொடர்ந்து அவர் 13 ஆண்டுகளாக அதிபர் பதவி வகித்து வருகிறார்.

அங்கு புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கு கடந்த ஏப்ரல் மாதம் 5–ந் தேதி தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட ஹமீது கர்சாய்க்கு அனுமதி தரப்படவில்லை.201407090029161385_AfghanPresidential_SECVPF

அப்துல்லா அப்துல்லா–அஷ்ரப் கனி

இந்தத் தேர்தலில் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா அப்துல்லா, பொருளாதார நிபுணர் அஷ்ரப் கனி ஆகியோர் போட்டியிட்டனர். அவர்கள் இடையே கடும் போட்டி நிலவியது.

கடந்த ஏப்ரல் 5–ந் தேதி நடந்த தேர்தலில் யாரும் 50 சதவீத ஓட்டுக்களைப் பெற முடியவில்லை.

அஷ்ரப் கனி வெற்றி

இதன் காரணமாக அங்கு இரண்டாவது சுற்று தேர்தல் கடந்த மாதம் 14–ந் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலின் முதல் கட்ட முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இந்தத் தேர்தலில் அப்துல்லா அப்துல்லா வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சற்றும் எதிர்பாராத வகையில் அஷ்ரப் கனி 56.44 சதவீத ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்றிருப்பதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. இறுதிக்கட்ட முடிவு வரும் 22–ந் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். இதில் ஓட்டு சதவீதம் மாறக்கூடும் என தகவல்கள் கூறுகின்றன.

நிராகரிப்பு

இந்தத் தேர்தல் முடிவினை அப்துல்லா அப்துல்லா ஆதரவாளர்கள் முழுமையாக நிராகரித்து விட்டனர்.

இதுபற்றி அப்துல்லா அப்துல்லாவின் செய்தி தொடர்பாளர் முஜிப் ரகுமான் ரஹிமி கூறும்போது, ‘‘ இப்போது அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளை நாங்கள் ஏற்கவில்லை. இதில் மக்களின் ஓட்டுகளுக்கு எதிராக சதி நடந்துள்ளதாக கருதுகிறோம்’’ என கூறினார்.

இதற்கிடையே தேர்தல் முடிவுகள் தொடர்பாக அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா அறிவிப்பு

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி, ‘‘தேர்தல் தொடர்பாக எழுந்துள்ள அர்த்தமுள்ள குற்றச்சாட்டுகள், முறைகேடுகள் தொடர்பாக முழு அளவிலான ஆய்வு நடத்தப்படவேண்டும். சட்டத்துக்கு விரோதமாக யாராவது அதிகாரத்தை எடுத்துக்கொள்ள முயற்சி செய்தால், ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி வருகிற நிதி, ராணுவ ஆதரவை இழக்க வேண்டி வரும்’’ என எச்சரித்தார்.

இந்தத் தேர்தலில் பெருமளவு மோசடி நடந்துள்ளதாக அப்துல்லா அப்துல்லா குற்றம் சாட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் தலீபான்களுக்கு எதிராக தீவிரமாக போராடியவர் ஆவார்.