ஹமாஸ் மீது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தப் போவதாக இஸ்ரேலியப் பிரதமர் பென்யாமின் நெதன்யாஹூ கூறியுள்ளார். ராணுவத் தளபதிகளுடன் நடந்த ஆலோசனைக்குப் பிறகு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது பாலஸ்தீன போராளிகள் நடத்திய ராக்கெட் தாக்குதலுக்கு அவர்கள் “பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.
தற்போது நடந்துவரும் தாக்குதல்களில் இதுவரை 35 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருப்பதகாவும் 150க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பதாகவும் காஸா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் பாதிப் பேர், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இனி இஸ்ரேலியர்கள் அனைவருமே தங்கள் இலக்குகள் என ஹமாஸின் ராணுவப் பிரிவு தெரிவித்துள்ளது.
செவ்வாய்க் கிழமையன்று 117 ராக்கெட்டுகள் இஸ்ரேல் மீது வீசப்பட்டதாகவும் தங்களுடைய ராக்கெட் தடுப்பு அமைப்பு 20 ராக்கெட்டுகளை தடுத்ததாகவும் மூன்று ராக்கெட்டுகள் ஜெருசலத்தை சுற்றி விழுந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
“தாக்குதல் அதிகரிக்கும்”
அடுத்த சில நாட்களில் காஸா மீதான தாக்குதல் அதிகரிக்கும் என்று இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் மோஸே யாலோன் தெரிவித்துள்ளார்.
காஸாவுக்கு தாங்கள் துருப்புக்களை அனுப்பக்கூடும் என்றும் இஸ்ரேல் எச்சரித்திருக்கிறது.
பாலஸ்தீன அரசின் மஹ்மூத் அப்பாஸ் காஸா மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டுமென கோரிக்கைவிடுத்துள்ளார்.
மேற்குக் கரைப் பகுதியில் மூன்று இஸ்ரேலிய இளைஞர்களும் கொல்லப்பட்டது, ஜெருசலத்தில் பாலஸ்தீன இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டது ஆகிய சம்பவங்களையடுத்து இப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
ஹமாஸ்தான் இஸ்ரேலிய இளைஞர்களைக் கடத்திக் கொலைசெய்தது என இஸ்ரேல் கூறுகிறது. ஆனால், ஹமாஸ் அதனை மறுத்துள்ளது.
இந்த மூன்று பேரின் இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகு, பாலஸ்தீன இளைஞர் ஒருவர் கிழக்கு ஜெருசலத்தில் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டார். இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 6 யூதர்களை காவல்துறை கைதுசெய்தது. -BBC
இஸ்ரேல் கலவரம்: ஐ.நா. பாதுகாப்பு சபையில் இன்று அவசர கூட்டம்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடந்து வரும் கலவரம் தொடர்பாக விவாதிக்க ஐ.நா.சபை கூட்டம் இன்று கூடுகிறது.
ஐ.நா. பொதுச் செயலாளர் தலைமையில் கூடும் இந்தக் கூட்டத்தில் அரபுத் தூதர்கள் கலந்து கொள்கின்றனர். இன்று காலை பான் கி மூன் தலைமையில் கூடும் இந்தக் கூட்டத்தை தொடர்ந்து 15 உறுப்பினர்களிடையே ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது. முன்னதாக குவைத் தூதர் மன்சூர் அல் ஒடாய்பி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மற்றும் பாலஸ்தீனிய மக்களின் கூட்டு தண்டனை ஆகியவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.