உக்ரைனின் கிழக்கு பகுதியை ரஷ்யாவுடன் இணைக்க வேண்டும் அல்லது சுயாட்சி பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்காக கடந்த சில மாதங்களாக ஆயுதம் ஏந்தி போரிட்டு வருகிறார்கள். அவர்கள் மீது உக்ரைன் அரசும் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த பகுதியில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் உக்ரைன் ஜனாதிபதி பெட்ரோ பொரோஷெங்கோ போர் நிறுத்தம் ஏற்படுத்தி, அமைதி திட்டம் ஒன்றையும் கிளர்ச்சியாளர்களுக்கு அறிவித்தார். ஆனால் இதை கிளர்ச்சியாளர்கள் ஏற்றுக் கொள்ளாததை தொடர்ந்து போர்நிறுத்தம் கைவிடப்பட்டது.
இந்தநிலையில் கிழக்கு உக்ரைனின் தற்போதைய நிலவரம் குறித்து அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ பிடேனுடன் உக்ரைன் ஜனாதிபதி தொலைபேசியில் விவாதித்தார்.
அப்போது, சர்ச்சைக்குரிய பகுதியில் போர்நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் அளித்த வாய்ப்புகளை, கிளர்ச்சியாளர்களும், ரஷ்யாவும் நிராகரித்து விட்டதாக உக்ரைன் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.
அப்போது, ‘கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா அளித்து வரும் ஆதரவை தடுப்பது தொடர்பாக, அமெரிக்கா தனது நேசநாடுகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளது என ஜோ பிடேன் கூறியதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.