காஸாவில் போர்நிறுத்தம் கொண்டுவர மேலை நாடுகள் இன்று பேச்சுவார்த்தை

gazaகாஸா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவது பற்றி அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் ஞாயிற்றுக்கிழமை விவாதிக்கப் போவதாக பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.

அவர் இந்த விவகாரம் தொடர்பாக வியன்னாவில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரியுடன் ஞாயிற்றுக்கிழமை விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மேலும், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவற்றின் வெளியுறவு அமைச்சர்களுடனும் விவாதிக்க உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “வியன்னாவில் ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதற்கு இடையே, காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே நடைபெறும் சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து நாங்கள் விவாதிப்போம்’ என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் விமானத் தாக்குதல்: பலி 135ஆக உயர்வு

இதனிடையே, இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது 5ஆவது நாளாக சனிக்கிழமை நடத்திய விமானத் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் இஸ்மாயில் ஹனியேவின் 2 உறவினர்கள் உள்பட 28 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 135ஆக உயர்ந்துள்ளது.

இது குறித்து பாலஸ்தீன சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அஷ்ரஃப் அல்-குத்ரா கூறுகையில்,””பாலஸ்தீனத்தின் வடக்கு காஸா பகுதியிலுள்ள லாஹியா நகரில் ஒரு தொண்டு நிறுவனம் மீதும், மேற்கு காஸா நகர்ப் பகுதியிலும் இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை அடுத்தடுத்து நடத்திய விமானத் தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர்.

அதைத் தொடர்ந்து வடக்கு காஸா பகுதியில் ஜெபாலியா நகரில் உள்ள அகதிகள் முகாம் மற்றும் தெற்கு டெயீர் எல் பாலா ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் விமானங்கள் குண்டுகளை வீசியதில் 5 பேர் உயிரிழந்தனர்” என்றார்.

அதே வேளையில், இஸ்ரேலின் முக்கிய நகரங்களை குறிவைத்து சிறிய ரக பீரங்கி மற்றும் ஏவுகணை மூலம் தாக்குதலில் ஈடுபட்டு வரும் ஹமாஸ் தீவிரவாதிகள், 689 முறை ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.

“அடிபணிய மாட்டோம்’: இந்நிலையில், ஜெருசலேமில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், “”காஸாவில் இருந்து ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது நடத்தி வரும் ஏவுகணைத் தாக்குதலை தடுக்க அனைத்து விதமான படை பலத்தையும் பயன்படுத்துவோம். இந்த விஷயத்தில் சர்வதேச நெருக்கடிக்கு அடிபணிய மாட்டோம்” என்றார்.