சுமார் 1.7 மிலியன் மக்கள் தொகை கொண்ட காசா நிலப்பரப்பு, 40 கிமீ நீளமும், 10 கிமீ அகலமும் கொண்டது. மத்தியதரைக்கடல், இஸ்ரேல், எகிப்து ஆகியவற்றால் சூழப்பட்ட பகுதி.
முதலில் எகிப்தால் ஆக்ரமிக்கப்பட்டது காசா நிலப்பரப்பு. எகிப்து இன்னும் காசாவின் தென் எல்லையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இந்த கடற்கரையோர நிலப்பரப்பை இஸ்ரேல் 1967 போரின் போது கைப்பற்றியது.
ஆனால் 2005ம் ஆண்டில் இஸ்ரேல் இந்தப் பகுதியிலிருந்த தனது படைகளையும், சுமார் 7,000 குடியேறிகளையும் விலக்கிக்கொண்டது.
அதற்கு ஓராண்டுக்குப் பின்னர், தீவிரவாத இஸ்லாமியக் குழுவான ஹமாஸ் பாலத்தீன சட்டசபைத் தேர்தல்களில் வென்றது. பாலத்தீன நிர்வாக அமைப்பின் அதிபர் மஹ்மூத் அப்பாஸின் ஃபத்தா குழுவுடன் ஏற்பட்ட வன்முறையான பிளவை அடுத்து, ஹமாஸ், காசாவை 2007லிருந்து 2014வரை ஆட்சி செய்தது.
ஹமாஸ் காசாவில் வெற்றி பெற்றவுடன், இஸ்ரேல் அப்பகுதியின் மீது முற்றுகையை அமல்படுத்தி, அங்கிருந்து பொருட்கள் மற்றும் மக்கள் வெளியே வருவதையோ, அல்லது அங்கு செல்வதையோ தடுத்தது. எகிப்தும் காசாவின் தென்பகுதி எல்லையை மூடியது.
நடமாடும் சுதந்திரம்
காசாவில் ஏற்கனவே வரையறைக்குள் இருந்த நடமாடும் சுதந்திரம்2013ன் மத்திய காலப்பகுதிக்குப் பின்னர், குறிப்பாக, எகிப்து ரஃபா எல்லைப்புறக் கடவைச் சாவடியில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து, எகிப்து-காசா எல்லைப்புறப் பகுதியில் இருக்கும் சுரங்கவழிக் கடத்தல் வலையமைப்புகளை மூடத் தொடங்கியதும், மேலும் கணிசமாக குறைந்துவிட்டது.
2013ம் ஆண்டின் முதல் பகுதியில் ரஃபா கடவைச்சாவடியில், மாதமொன்றுக்கு சுமார் 40,000 பேர் கடந்து சென்றனர். ஆனால் 2013 ஜூலையிலிருந்து டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், போக்குவரத்து இந்தப் பகுதியில் மாதமொன்றுக்கு 9,550 பேர் என்ற அளவுக்குக் குறைந்தது.
சமீப ஆண்டுகளில், இஸ்ரேல், வடக்கே உள்ள எரெஸ் கடவைச்சாவடியில் கட்டுப்பாடுகளை விதித்ததை அடுத்து, ரஃபா கடவைச் சாவடியே, பாலத்தீனர்களுக்கு காசாவுக்குள் நுழையவும், வெளியேறவும் இருக்கும் ஒரே இடமாக மாறிவிட்டது.
ஆனால் இந்த முற்றுகை இறுகிய பின்னர், இந்தக் கடத்தல் சுரங்க வழிகள் பல்கிப் பெருகிவிட்டன. இந்த வழிகள் மூலமாக, கட்டுமானப் பொருட்கள் , கால்நடைகள், எரிபொருட்கள், உணவு, பணம் மற்றும் ஆயுதங்கள் என எல்லாம் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்த முற்றுகை 2010 ஜூன் மாதம் தளர்த்தப்பட்டபோது, செயல்பாட்டில் இருந்து வந்த சுமார் 1,000 சுரங்கங்கள் 200லிருந்து 300 வரை என்று குறைந்தன. தனியார் துறைக்கு கட்டுமானப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களைக் கடத்திவருவதில் கடத்தல்காரர்கள் கவனம் செலுத்தினர். இவை இஸ்ரேலில் கிடைப்பதை விட எகிப்தில் குறைந்த விலைக்குக் கிடைத்தன.
ஆனால் 2013ல் இந்த சுரங்க வழிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விளைவாக, காசாவிற்குப் பொருட்களைக் கடத்துவது ஏறக்குறைய முற்றிலுமாக நின்று, அங்கு கட்டுமானப் பொருட்கள், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்தது.
பொருளாதாரம்
காசா மக்கள் பொதுவாக 1990களில் இருந்த்தை விட இப்போது மோசமான நிலையில் இருக்கிறார்கள்.
அவர்களில் 21 சதவீதத்தினர் மிகவும் வறிய நிலையில் இருக்கிறார்கள். மாத வருமானம் 534 டாலர்களுக்கும் குறைவுதான். மேற்குக் கரையில் இருக்கும் பாலத்தீனர்கள் ஒப்பீட்டளவில் பார்த்தால், சற்று மேம்பட்ட நிலையில் இருக்கிறார்கள். அவர்களில் 7.8 சதவீதத்தினரே வறுமையில் இருக்கிறார்கள்.
காசா நிலப்பரப்பில் வேலையில்லாதோர் விகிதம் 40.8 சதவீதம். இது மேற்குக் கரையைவிட கணிசமான அளவு அதிகம். குறிப்பாக இளைஞர்களிடையே வேலையில்லாத் திண்டாட்ட விகிதம் 50 சதவீதக்கும் மேலாக இருக்கிறது காசாவில்.
கடத்தலுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் 2013ல் காசாவின் பொருளாதாரத்திற்கு சுமார் 460 மிலியன் டாலர்கள் நஷ்ட்த்தை ஏற்படுத்திவிட்டன என்று ஹமாஸ் நிர்வாகத்தில் இருக்கும் பொருளாதார அமைச்சகம் கூறுகிறது.
கல்வி
காசாவின் பள்ளிக் கல்வி அமைப்பு நெருக்கடியில் இருக்கிறது. இந்தப் பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களை நட்த்திவரும் ஐநா மன்றம், 2020வாக்கில் அதிகரிக்க எதிர்பார்க்கப்படும் மக்கள் தொகைக்கு ஏற்ப மேலும் 440 பள்ளிக்கூடங்கள் கூடுதலாகத் தேவைப்படுவதாகக் கூறுகிறது.
சுமார் 4.63 லட்சம் குழந்தைகள் 694 தொடக்க மற்றும் இடை நிலைப் பள்ளிகளில் படிக்கிறார்கள்.
கல்வி வசதிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பல பள்ளிக்கூடங்கள் இரட்டை ஷிப்ட் முறையில் இயங்குகின்றன. இதனால் பாடம் நடத்தும் நேரம் குறைக்கப்படுகிறது. வகுப்புகளின் அளவும் பெரிதாகவே இருக்கின்றன.
இதனால் பள்ளி நாட்கள் குறைந்த நேரமே நீடிக்கின்றன. இடை நிலைக் கல்வியமைப்பில் மாணவர் சேர்க்கை குறைவாகவே இருக்கிறது. ஆனாலும், கல்வி அறிவு குறித்த அதிகாரபூர்வப் புள்ளிவிவரங்கள் பெண்களுக்கு 93 சதவீதம், ஆண்களில் 98 சதவீதம் என்று உயர்வாகவே இருக்கின்றன.
மேலும் ஒரு பிரச்சினை – 13 பள்ளிகள் காசா-இஸ்ரேல் எல்லைப்புற வேலி அருகே அமைந்திருக்கின்றன. இந்தப் பகுதியில்தான் இஸ்ரேலியத் துருப்புக்களுக்கும் பாலத்தீனத் தீவிரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடக்கின்றன.
மக்கள் தொகை
காசாவின் மக்கள் தொகை இந்த தசாப்தத்தின் முடிவில் 2.13 மிலியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஏற்கனவே உலகில் மிக அதிக ஜனத்தொகை அடர்த்தியுள்ள பகுதிகளில் ஒன்றான காசா நிலப்பரப்பில் மக்கள் தொகை அடர்த்தியை மேலும் அதிகரிக்கும்.
சராசரியாக, காசாவில் மக்கள் தொகை சதுர கிமீக்கு 4,505 என்று இருக்கிறது. இது 2020ம் ஆண்டு வாக்கில் சதுர கிமீக்கு 5,835ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயற்கையாக ஏற்படும் மக்கள் தொகை அதிகரிப்பாலும், இஸ்ரேல் 2008-2009ல் நடத்திய தரைவழித் தாக்குதலாலும், 70,000 வீடுகள் பற்றாக்குறை இருப்பதாக ஐ.நா மன்றம் கூறுகிறது. சுமார் 12,000 பேர் அவர்களது வீடுகள் அழிக்கப்பட்ட நிலையில் இடம்பெயர்ந்து வாழ்கிறார்கள்.
வயது 15க்கு மேல் இருப்பவர்களில் , 15லிருந்து 29வயதானவர்கள் சுமார் 53 சதவீதமாக இருக்கிறார்கள். இது மிகவும் அதிகமான ஒரு எண்ணிக்கை.
பொருளாதார வளர்ச்சி இருந்தால் இந்த இளம் வயதினர் வேலைக்குப் போக வாய்ப்பு இருக்கிறது. அது நடக்கவில்லை என்றால், சமூக பதற்றங்களூம்,வன்முறையும் தீவிரவாதமும் அதிகரிக்கும் சாத்தியக்கூறு இருப்பதாக ஐ.நா கூறுகிறது.
மருத்துவ வசதி
காசாவில் மக்களின் ஆரோக்கியம் தொடர்பான அறிகுறிகளை பார்த்தால், நடுத்தரமான ஏன் வளம்மிக்க நாடுகளில் உள்ளதுபோல் இருப்பதாக ஐநா கூறுகிறது. ஆனால் மருத்துவ சேவையின் தரம் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது.
மக்களுக்கு போதுமான வசதிகளை செய்துதர முடியாத நிலையில் மருத்துவ சேவை மையங்கள் இருந்துவருகின்றன.
2013 ஆம் ஆண்டு மையப்பகுதியில் எகிப்து அதிகாரிகள் எடுத்த சில நடவடிக்கைகளின் விளைவாக காசாவில் மருத்துவ சேவைகளின் தரம் தாழ்ந்துள்ளதென ஐநா கூறுகிறது.
ரஃபாவிலுள்ள எல்லைக்கடவை மையத்தை எகிப்தியர்கள் மூடியதை அடுத்து, மருத்துவ சிகிச்சைக்காக எகிப்து செல்லும் மக்களின் எண்ணிக்கையும் குறைந்தது.
மருத்துப் பொருட்கள் கிடைப்பதும் கஷ்டமாகியது.
பொருட்களைப் கடத்திக் கொண்டுவருவதற்கு பயன்பட்ட சுரங்கங்களை எகிப்து மூடியதை அடுத்து எரிபொருளுக்கும் மின்சாரத்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட மருத்துவமனைகளும் பாதிக்கப்பட்டன.
உணவு
2012ஆம் ஆண்டுக்கும் 2013ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உணவுத் தட்டுப்பாடும், உணவு பாதுகாப்பின்மையும் காசாவில் அதிகரித்துள்ளது. காசாவின் ஜனத்தொகையில் எண்பது சதவீதமானோர் ஏதோ ஒரு வடிவத்தில் உணவு உதவியை பெற்றுவருகிறார்கள், காரணம் தாமாக உணவுத் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய வருமானம் இவர்களுக்கு இல்லை.
காசா இஸ்ரேல் இடையிலான எல்லை நெடுகிலும் 1.5 கிலோமீட்டர் அகலம் கொண்ட நிலப்பரப்பை, யாருக்கும் சொந்தமற்ற நிலப்பரப்பு என இஸ்ரேல் அறிவித்துள்ளது. எனவே அங்கு காசா மக்கள் விவசாயமும் செய்ய முடியாது.
இதனால் அவ்விடத்தின் உணவு உற்பத்தி ஆண்டுக்கு 75 ஆயிரம் டன்கள் என்ற அளவினால் குறைந்துபோயுள்ளது.
2012 நவம்பரில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை அடுத்து காசா மக்கள் மீன்பிடிக்கக்கூடிய கடல் எல்லை மூன்று கடல் மைல் தூரம் என்ற அளவிலிருந்து ஆறு கடல்மைல்களாக அதிகரிக்கப்பட்டது என்றாலும், ஹமாஸ் ரொக்கெட் வீச்சை அடுத்து அது மீண்டும் 3 கடல்மைல்களாக குறைக்கப்பட்டுவிட்டது.
எல்லை தாண்டும் பாலஸ்தீன மீன்பிடிப் படகுகளை நோக்கி இஸ்ரேலிய கடற்படையினர் அடிக்கடி சுடுவதும் உண்டு.
இந்த எல்லைக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டால், காசா மக்களுக்கு உணவும் கிடைக்கும் வேலைவாய்ப்பும் பெருகும் என்று ஐநா கூறுகிறது.
மின்சாரம்
காசாவைப் பொறுத்தவரை தினந்தோறும் மின்வெட்டுகள் உண்டு. காசாவுக்கு மின்சாரம் கிடைப்பது பெரும்பங்கு இஸ்ரேலிடம் இருந்துதான். காசாவில் ஒரேயொரு மின் உற்பத்தி நிலையம் உண்டு. கொஞ்சம் மின்சாரத்தை எகிப்தும் வழங்குகிறது. ஆனால் காசாவுக்கு தேவைப்படுமளவான மின்சாரம் அதற்கு கிடைப்பதில்லை.
வீட்டிலேயே ஜெனரேட்டர்கள் இருந்தாலும், எரிபொருள் விலை மிகவும் அதிகம்.
காசாவின் மின் உற்பத்தி நிலையம் எகிப்திலிருந்து கிடைக்கும் டீசலையே பெரிதும் நம்பியுள்ளது. ஆனால் பொருள் கடத்தலுக்கான சுரங்கப்பாதைகள் அடைபட்டதிலிருந்து மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
2013ல் டீசல் இல்லாமல் 43 நாட்களுக்கு இந்த மின் உற்பத்தி நிலையம் மூடப்படவேண்டி வந்தது.
அந்நேரம் மின்வெட்டுகள் அதிகமாகி அடிப்படை சேவைகள்கூட மோசமாக பாதிக்கப்பட்டன.
கத்தார் கொடுத்த உதவித்தொகையை வைத்து இஸ்ரேலிடம் இருந்து டீசல் வாங்கி மின் நிலையம் மீண்டும் இயங்க ஆரம்பித்தது என்றாலும் இவ்வாண்டு மீண்டும் மின்வெட்டுகள் அதிகமாகியுள்ளன.
காசாவை ஒட்டிய கடல்பரப்பில் எரிவாயு வயல்கள் இருப்பதாகவும், இதனை எடுத்துப் பயன்படுத்தினால் காசாவின் மின் தேவையையும் பூர்த்தி செய்யலாம், அதைத்தாண்டி வெளியிலும் விற்று முன்னேறலாம் என ஐநா கூறுகிறது.
குடிநீர் மற்றும் துப்புரவு வசதிகள்
காசாவில் குறைவாகவே மழை பெய்யும், குடிநீர் ஆதாரமாக விளங்கும், குடிநீர் தொடர்ந்து கிடைக்கும் அளவிலுள்ள ஏரிகளும் அங்கு இல்லை. எனவே அங்கு தண்ணீர் தட்டுப்பாடும் அதிகம்.
தவிர கடல் நீர் நிலத்தடி நீரில் கலந்து அதுவும் உப்பாகிவிட்டது. காசாவில் குழாய்களில் வரும் தண்ணீரில் 5 சதவீதமான நீர்தான் உலக சுகாதார நிறுவனத்தால் அறிவுறுத்தப்பட்ட தரத்தில் இருக்கிறது.
காசாவிலுள்ள 3,40,000 பேர் குறைவான தரத்திலுள்ள நீரையே குடிக்கப் பயன்படுத்தி வருகின்றனர்.
கழிவு நீரை சுத்திகரிப்பது, சாக்கடை வசதி போன்றவையும் இங்கு பெரும்பிரச்சினைகளாக உள்ளன. இங்குள்ள கழிவு நீரை சுத்தம் செய்யும் மையங்கள் அளவுக்கதிகமான பளுவை சுமக்கின்றன. தவிர இவையெல்லாம் தற்காலிக ஏற்பாடுகளாக நிறுவப்பட்ட இடங்கள்தான். எனவே ஒவ்வொரு நாளும் 90 மில்லியன் லிட்டர்கள் அளவான கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் மத்தியதரைக்கடலில் விடப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது, பொதுமக்களின் ஆரோக்கியம் கெடுகிறது, மீன்வளமும் அழிகிறது.
2013 நவம்பரில் மின் தட்டுப்பாடு நிலவியபோது கழிவுநீர் அதிகமாகி, சுத்திகரிப்பு நிலையங்கள் வெள்ளக்காடாகின.
அடுத்த மாதம் புயல் ஒன்று தாக்கியபோது, வெள்ளநீரும் கழிவுநீரும் ஒன்றாகக் கலந்து பெரும் சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்தது. -BBC