உலகளவில் எய்ட்ஸ் நோயால் மரணமடைபவர்கள் மற்றும் அதன் தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை, கடந்த தசாப்தத்தை ஒப்பிடும்போது, மூன்றில் ஒரு பங்கு அளவைவிட கூடுதலாக குறைந்துள்ளன என்று, இது தொடர்பிலான ஐ நா அமைப்பு கூறியுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டில் 15 லட்சம் மக்கள் எய்ட்ஸ் நோயால் உயிரிழந்துள்ளனர் என்று கூறும் யுஎன்எய்ட்ஸ் அமைப்பு, அதே காலப்பகுதியில் இந்த நோய்க் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 லட்சமாக குறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
ஆனாலும் 2012 ஆம் ஆண்டைப் பார்க்கும்போது, உலகளவில் எய்ட்ஸ் நோய்க்கான வைரஸுடன் வாழ்பவர்களின் எண்னிக்கை சற்று உயர்ந்து 35 மில்லியனாக இருந்தது என்றும் யுஎன்எய்ட்ஸ் அமைப்பு கூறியுள்ளது.
எய்ட்ஸ் நோயை எதிர்த்து போராடுவதற்கான நிதியுதவிகள் அதிகரித்து வந்தாலும், அந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உயிர் காக்கும் மருந்துகள் கிடைப்பதில் இன்னும் குறைபாடுகள் உள்ளன என்றும் யுஎன்எய்ட்ஸ் தெரிவித்துள்ளது.
உலகளவில் ஆப்ரிக்காவே எய்ட்ஸ் நோயால் மிகவும் பாதிக்கப்பட்ட கண்டமாக திகழ்கிறது என்றும் ஐ நா வின் ஒரு அங்கமான அந்த அமைப்பு கூறியுள்ளது. -BBC