விமானம் விழுந்த இடத்தில் சர்வதேச விசாரணையாளர்கள்

கிழக்கு யுக்ரெய்னில் மலேஷிய ஏர்லைன்ஸ் விமானம் தரையில் விழுந்த இடத்திற்கு சர்வதேச விசாரணையாளர்கள் சென்றடைந்துள்ளனர்.

வியாழன் மதியம் பறந்துகொண்டிருந்தபோது சுடப்பட்டு இந்த விமானம் கீழே விழுந்ததாகத் தெரிகிறது.

ஓ எஸ் சி இ ஐரோப்பிய பாதுகாப்பு கூட்டுறவு அமைப்பைச் சேர்ந்த முப்பது நிபுணர்கள் சம்பவ இடத்தை ஹெலிகாப்டரில் சென்றடைந்துள்ளனர்.

மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து அழிந்துள்ள இச்சம்பவம் தொடர்பில் ஒரு முழுமையான, ஆழமான, சுயாதீனமான ஒரு சர்வதேச விசாரணைக்கு ஐநா பாதுகாப்பு சபை கோரியுள்ளது.

யுக்ரெய்னில் சண்டையில் ஈடுபட்டுள்ள அரசு தரப்பும், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சித் தரப்பும் ஏவுகணையால் இந்த விமானத்தை மற்றவரே சுட்டு வீழ்த்தியதாக ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்த விமான சேதங்களை சர்வதேச விசாரணையாளர்கள் வந்து பார்வையிடுவதை அனுமதிப்போம் என ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிக்காரர்கள் முன்னதாக தெரிவித்திருந்தனர்.

மலேஷியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட செயல் ஒரு சர்வதேசக் குற்றம் என்றும் அதற்குப் பொறுப்பானவர்கள் தி ஹேக் நீதிமன்றத்தில் குற்றவியல் நடவடிக்கையை சந்திக்க வேண்டும் என்றும் யுக்ரெய்னிய பிரதமர் கூறியிருந்தார்.

விழுந்துகிடந்த சிதிலத்தின் மீது மலர் வைத்து அஞ்சலிவிமானம் விழுந்ததை கண்டு அதிர்ந்த அப்பிரதேசத்து மக்கள் சிதிலத்தின் மீது மலர் வைத்து அஞ்சலி செலுத்தினர்

கிழக்கு யுக்ரெய்னிய கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவு தருவதில் ரஷ்யா அளவுக்கதிகமாகச் சென்றுவிட்டது என்று பிரதமர் அர்செனியு யத்சென்யுக் கூறினார்.

ஆம்ஸ்டெர்டாமிலிருந்து கோலாலம்பூரை நோக்கிப் பறந்த இந்த விமானம் கிழக்கு யுக்ரெய்னில் ரஷ்யாவுடனான எல்லைக்கு அருகில், ரஷ்ய ஆதரவு பெற்ற கிளர்ச்சிக்காரர்கள் வசமுள்ள ஒரு பகுதியில், கீழே விழுந்து அழிந்துபோனது. இதில் அந்த விமானத்திலிருந்து கிட்டத்தட்ட முந்நூறு பேரும் உயிரிழந்தனர்.

இந்த விமானத்தின் பிளாக் பாக்ஸ் பதிவுக் கருவிகள் ஏற்கனவே கண்டெடுக்கப்பட்டுவிட்டன. -BBC

 

மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம்: சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தல்

 

  • சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் சிதறிக் கிடக்கும் பாகங்கள்.
    சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் சிதறிக் கிடக்கும் பாகங்கள்.

கிழக்கு உக்ரைன் பகுதியில் மலேசியப் பயணிகள் விமானம் வியாழக்கிழமை சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று உலகத் தலைவர்கள் வலியுறுத்தினர்.

“இந்தச் சம்பவம் தொடர்பாக வெளிப்படையான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று ஐ.நா. பொதுச் செயலர் பான்கி மூன் வலியுறுத்தினார்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து சுதந்திரமான, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வெள்ளிக்கிழமை ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதேபோல, அமெரிக்க அதிபர் ஒபாமாவும் சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தினார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மலேசிய விமானம் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பகுதியில் இருந்து தான் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. உடனடியாக ரஷிய ஆதரவு கிளர்ச்சிப் படையும், உக்ரைன் அரசும் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும்’ என்றார் ஒபாமா.

இந்தச் சம்பவத்தில் மிகுந்த பாதிப்புக்குள்ளான மலேசியா உள்பட உயிரிழந்த பயணிகளின் நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தி வருவதால், உலக அளவில் இந்தக் கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

எனினும், இந்த நாசகர சம்பவம் குறித்து உக்ரைன் அரசும், ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர் படையும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.

பயணிகளின் அடையாளம் தெரிந்தது: ஏவுகணைத் தாக்குதலால் வெடித்துச் சிதறிய விமானத்தில் சென்ற 298 பயணிகளும் உயிரிழந்தனர். இறந்தவர்களில், நெதர்லாந்து நாட்டின் 173 பேர், மலேசிய நாட்டின் 44 பேர், ஆஸ்திரேலியாவின் 28 பேர், இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த 12 பேர், பிரிட்டனைச் சேர்ந்த 9 பேர், ஜெர்மனி, பெல்ஜியம் நாடுகளைச் சேர்ந்த தலா 4 பேர், பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த 3 பேர், கனடா, நியூசிலாந்து, ஹாங்காங் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

அவர்களில் 100 பேர் தலைசிறந்த எய்ட்ஸ் நோய் ஆராய்ச்சியாளர்கள் ஆவர். உயிரிழந்த விமானப் பணியாளர் 15 பேர்களில் 2 பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.

ஆஸ்திரேலியா கண்டனம்: இந்தச் சம்பவம் தொடர்பாக அதிருப்தியளிக்கும் வகையில் பதிலளித்துள்ளதாக ரஷியாவுக்கு ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது விபத்து அல்ல; குற்றம் என்றும், இது குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்றும் டோனி அபோட் கூறினார். உக்ரைன் அதிபர் பெட்ரோ புரோசென்கோ கூறுகையில், “தீவிரவாதிகள் ஒரே தாக்குதலில் 300 பேரைக் கொன்றுவிட்டனர்’ என்றார்.

பரஸ்பர குற்றச்சாட்டு: மலேசிய விமானத்தை தாக்கிய “பக்’ விமான எதிர்ப்பு ஏவுகணை சம்பவ தினத்தன்று உக்ரைன் அரசு கட்டுப்பாட்டில் இயக்கப்பட்டதற்கான ராடார் தகவல்கள் சேகரிகப்பட்டுள்ளதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், செய்தியாளர்களிடம் பேசிய உக்ரைன் பிரதமர் அர்செனி யாட்சன்யுக், “இந்தச் சம்பவம் ரஷியாவின் ஆதரவுடன் நடைபெற்றுள்ளது. இது சர்வதேசக் குற்றம் என்பதால் சர்வதேச தீர்ப்பாயம் விசாரிக்க வேண்டும்’ என்றார்.

மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்துவது தொடர்பாக ரஷிய ஆதரவு கிளர்ச்சிப் படையினர் இருவருக்கிடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் பதிவு உக்ரைன் அரசிடம் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“தரையிலிருந்து பாய்ந்து ஏவுகணை மூலம்தான் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதற்கு யார் காரணம் என்று தெரியவில்லை’ என்று அமெரிக்க உளவு அமைப்புகள் தெரிவித்தன.

விசாரணை தேவை: இதனிடையே, இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி இதற்குக் காரணமானவர்களை சட்டத்துக்கு முன்பு நிறுத்த வேண்டும் என்று மலேசியப் பிரதமர் நஜீப் ரஜாக் வலியுறுத்தினார். “மலேசிய விமானம் சரியான வான் பயணப் பாதையில்தான் சென்றது.

விமானத்தை ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் கூறுகிறது. அதை தற்போதைக்கு மலேசியா உறுதிப்படுத்தவில்லை’ என்றார்.

ஆதாரம் அழிக்கப்படக் கூடாது: இந்தச் சம்பவம் தொடர்பாக மலேசியப் பிரதமர் நஜீப் ரஜாக், உக்ரைன் அதிபர் பெட்ரோ புரோசென்கோ ஆகியோருடன் அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். “வெளிப்படையான சர்வதேச விசாரணை நடைபெறும் வரை சம்பவ இடத்தில் இருந்து ஆதாரங்கள் அழிக்கப்படக் கூடாது’ என்று அப்போது அவர் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
கருப்புப் பெட்டி மீட்பு

சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் எம்எச்17-யின் இடிபாடுகளில் இருந்து கருப்புப் பெட்டியை மீட்டுள்ளதாக ரஷிய ஆதரவு கிளர்ச்சிப் படையினர் கூறினர். அந்தக் கருப்புப் பெட்டியை மாஸ்கோவுக்கு கொண்டு சென்று ஆய்வு நடத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்ததாக ரஷிய செய்தி நிறுவனமான இன்டர்ஃபேக்ஸ் கூறியது.

சம்பவ இடத்துக்கு சர்வதேச விசாரணைக் குழு சென்று பார்வையிடவும், உயிரிழந்த சடலங்களை மீட்கவும் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அனுமதித்துள்ளனர். அந்தப் பகுதியைத் தவிர மற்ற இடங்களில் போர் தொடர்ந்து நடைபெறும் என்றும் இரு தரப்பினரும் அறிவித்துள்ளனர்.

இதனிடையே, விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்து 181 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

 இந்திய விமானம் தப்பியது

கிழக்கு உக்ரைன் பகுதியில் வியாழக்கிழமை மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட போது அதே வான்வழித்தடத்தில் ஏர் இந்தியா விமானமும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானமும் 15 மைல் தொலைவில் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், மலேசிய விமானம் திட்டமிட்டு சுடப்பட்டதா அல்லது தவறுதலாகச் சுடப்பட்டதா என்பது குறித்து உறுதி செய்யப்படவில்லை.

மோடி இரங்கல்: இதனிடையே, மலேசிய விமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், நெதர்லாந்து பிரதமருக்கு மோடி அனுப்பியுள்ள இரங்கல் கடிதத்தில், “உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தில் உயிரிழந்தவர்கள் பெரும்பாலானோர் நெதர்லாந்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், குறிப்பாக தங்களுக்கும், தங்கள் நாட்டுக்கும் ஏற்பட்டுள்ள துயரத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.