காஸாவில் மரண ஓலங்கள் – அமெரிக்காவின் ஆசிர்வாதமா?

gaza_indexகாஸா மீது மேற்கொண்டு வரும் தாக்குதல்களுக்கு சர்வதேச ரீதியில் சட்ட அதிகாரம் கிடைத்துள்ளதாக இஸ்ரேல் பிரதமரர் பென்ஜமின் நெட்டன்யாகூ தெரிவித்துள்ளார்.

காஸாவிலிருந்து எறியப்படும் ரொக்கட்டுக்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை தமக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், இதற்காக போராடி வரும் தமக்கு வலுவான சர்வதேச ஆதரவு கிடைத்து வருவதாக கூறியுள்ளார்.

இதேநேரம், காசா மீது இஸ்ரேலிய தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மூன்றாவது தடவையாக நெட்டன்யாகுவுடன் தொலைபேசி மூலம் பேசியுள்ள அமெரிக்க ஜனாதிபதியும் இஸ்ரேல் தம்மை தற்காத்துக் கொள்வதற்கான உரிமைகள் குறித்து பேசியுள்ளார்.

இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பு மேற்கொண்டு வரும் தாக்குதல்களை அவர் கண்டித்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கையை மேற்கோள்காட்டி மத்திய கிழக்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

காஸாவில் வெளிப்படையாகவே மனிதப் படுகொலைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் சர்வதேச சட்டங்களை வலியுறுத்தும் அமெரிக்க போன்ற மேற்கத்தேய நாடுகள் மனிதத்துவத்திற்கு எதிரான இஸ்ரேலின் குற்றங்களை இன்னமும் கண்டு கொள்ளவில்லை.

மலேஷிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டமைக்காக கவலைகளை அள்ளிக் கொட்டி, அதற்கு எதிராக ரஷ்யாவை சாடி நடவடிக்கை எடுக்க முயன்று வரும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு இந்த காசா மாத்திரம் ஏன் கண்ணில் படுவதில்லை என்றுதான் தெரியவில்லை.

அமெரிக்கா சார்பு உக்ரைன் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்ட ரஷ்ய சார்பு கிழக்கு உக்ரைன் கிளர்ச்சியார்கள் மீதும், இஸ்ரேலுக்கு எதிராக போராடும் ஹமாஸ் தரப்பின் மீதும் அமெரிக்காவின் விரல் நீள்கின்றது.

ஜனநாயகத்தை விரும்பும் நாடு என்று தம்மை காட்டிக் கொள்ளும் இவ்வாறான நாடுகள் தமக்கு எதிரான நாடுகள் மற்றும் மக்களின் ஜனநாயகம் குறித்து கண்டு கொள்வதே இல்லை.