ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள டொனெட்ஸ்க் நகரை மீட்க உக்ரைன் அரசு சனிக்கிழமை தாக்குதலைத் தொடங்கியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து உக்ரைன் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரிய் லிசென்கோ கூறுகையில், “”டொனெட்ஸ்க் நகரின் வடக்குத் திசையில் உள்ள ஹார்லிக்வா புறநகர்ப் பகுதியில் உக்ரைன் படைகள் தயார் நிலையில் உள்ளன. ராணுவம் அந்த நகருக்குள் நுழைவதற்கு வசதியாக சாலைகள் திறக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார். டொனெட்ஸ்க் நகரில் மட்டும் 10 லட்சம் பேர் வசிக்கிறார்கள். இந்த நகரம் கடந்த 5 மாதங்களாக கிளர்ச்சியாளர்கள் வசமுள்ளது. இந்நிலையில் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷியா ஏராளமான ஆயுதங்களை வழங்கி வருவதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம்: உக்ரைனில் பிரதமர் ஆர்செனி யாட்சென்யுக்கின் திடீர் ராஜிநாமாவை ஏற்பதா? அல்லது நிராகரிப்பதா? என்பது குறித்து விவாதிப்பதற்காக வரும் வியாழக்கிழமை சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அந்நாட்டில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக நடந்து வரும் விசாரணையின் முன்னேற்றம் குறித்தும் அக்கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. உக்ரைன் நாட்டில் ஆளும் கூட்டணி அரசில் இடம்பெற்றிருந்த இரு அரசியல் கட்சிகள் தங்களது ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்ததையடுத்து, பிரதமர் ஆர்செனி யாட்சென்யுக் தனது பதவியை கடந்த வியாழக்கிழமை ராஜிநாமா செய்தார். எனினும், அவரது ராஜிநாமா உக்ரைன் நாடாளுமன்றத்தால் ஏற்கப்படவில்லை.