உக்ரைனின் கிழக்குப் பகுதியின் நிலைமை மோசமடைந்ததற்கும், கிரிமியாவை இணைத்துக் கொண்டதற்கும் காரணமானவர்களின் மீது தங்களது பொருளாதாரத் தடைகளை அதிகரிப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
அண்மையில் உக்ரேனின் கிழக்குப் பிராந்தியங்களில் ஒன்றான கிரிமியா ரஷ்யாவுடன் இணைந்தது.
பொருளாதார மேம்பாட்டிற்காக உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவது மறுக்கப்பட்டபோது ஏற்பட்ட நெருக்கடியை அடுத்து கிரிமியா ரஷ்யாவுடன் இணைந்தது.
அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் இதனை எதிர்த்து ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை விதித்தன. இருந்தாலும் அங்கு தாக்குதல்கள் இன்னும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
இந்த நிலையில் ஜப்பான் உக்ரைனின் கிழக்குப் பகுதியின் நிலைமை மோசமடைந்ததற்கும், கிரிமியாவை இணைத்துக் கொண்டதற்கும் காரணமானவர்களின் மீது தங்களது பொருளாதாரத் தடைகளை அதிகரிப்பதாக ஜப்பான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
சொத்துகளை முடக்குவதும், நெருக்கடியினால் சீர்குலைந்துள்ள கிரிமியாவில் இருந்து இறக்குமதியைத் தடை செய்வதுமான இந்த நடவடிக்கை, 23 ரஷ்ய நாட்டவரின் விசாக்களை ஜப்பான் மறுத்தபோது இதற்கான விளைவை எதிர்கொள்ள நேரிடும் என்று ரஷ்யா எச்சரித்த இரண்டு மாதங்களுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ரஷ்யாவின் வளர்ச்சித் திட்டங்களுக்கு புனரமைப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்கான ஐரோப்பிய வங்கி அளிக்கும் நிதி உதவிகளை முடக்கி வைப்பதில் ஜப்பானும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒருங்கிணைந்து செயல்படும் என்று அந்நாட்டின் அமைச்சரவை தலைமை செயலாளரான யோஷிஹைட் சுகா தெரிவித்துள்ளார்.
டோக்கியோவின் புதிய தடைகளுக்கு இலக்கான தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்கள் அமைச்சரவை ஒப்புதல் பெற்றபின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.