சீனாவில் சிறுபான்மை முஸ்லிம் உய்கர் சமுதாயத்தினர் அதிக அளவில் வசிக்கும் ஜின்ஜியாங் மாகாணத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர்.
சாச்சே கவுண்டியில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையத்திற்குள் கத்திகளுடன் புகுந்து மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். பொதுமக்களையும் சரமாரியாக வெட்டினர். இதில் உய்கர் மற்றும் ஹான் பிரிவைச் சேர்ந்த 12க்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் செய்தி வெளியாகி உள்ளது. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜின்ஜியாங் மாகாணத்தில் இவ்வாறு தொடர்ந்து நடத்தப்படும் தீவிரவாத தாக்குதல்களுக்கு பிரிவினைவாதிகள் மீது அரசு பொதுவாக குற்றம் சாட்டி வருகிறது. இந்த வன்முறை மற்ற பகுதிகளுக்கும் பரவி வருகிறது. மே மாதம் ஜின்ஜியாங் தலைநகரில் நடந்த தாக்குதலில் 39 பேரும், குன்மிங் ரெயில் நிலையத்தில் மார்ச் மாதம் நடத்தப்பட்ட கத்தி தாககுதலில் 29 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.