இபோலா: உலக சுகாதார நிறுவனம் நூறு மில்லியன் டாலர் திட்டம்

ebolaமேற்கு ஆப்பிரிக்காவில் இபோலா நோய் மிக வேகமாகப் பரவிவருகிறது என்றும் ஆனால் அதனைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகள் மந்தகதியிலேயே நகர்கின்றன என்றும் உலக சுகாதார கழகத்தின் தலைமை இயக்குநர் மார்கரெட் சான் கூறியுள்ளார்.

இந்த நோயினால் மோசமான பாதிப்புகளை சந்தித்துள்ள கினீ, லைபீரியா, சியர்ரா லியோன் ஆகிய நாடுகளின் அதிபர்களை கினீயிலுள்ள கொனாக்ரியில் சந்தித்த பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இபோலா நோய் அதன் சரித்திரத்தில் இதற்கு முன் இவ்வரவு பெரிய அளவில் பரவியது இல்லை என்று டாக்டர் சான் தெரிவித்தார்.

இந்நிலை நீடித்தால் மிக மோசமான பாதிப்புகள் உருவாகும் என்று அவர் எச்சரித்தார்.

ஆனால் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்றும், இந்த நோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒரு திருப்புமுனையாக இந்த சந்திப்பு அமைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஃபிப்ரவரியில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இம்முறை பரவ ஆரம்பித்த இபோலா கிருமி கினீ, லைபீரியா, சியர்ரா லியோன் உள்ளிட்ட நாடுகளில் எழுநூறுக்கும் அதிகமானோரை பலிகொண்டுவிட்டது.

இந்த நிலையில்தான் கினீயில் இன்று அவரச கூட்டம் ஒன்றை நடத்தி இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு என நூறு மில்லியன் டாலர் திட்டம் ஒன்றை உலக சுகாதார கழகம் கொண்டுவந்துள்ளது

இபோலா காய்ச்சல் அறிகுறிகள்

இபோலா கிருமிஇபோலா கிருமி

சாதாரணமாக பழந்தின்னி வவ்வால்களிடம் காணப்படுகின்ற இபோலா கிருமி அவ்வப்போது மனிதர்களிடத்தில் பரவுவதுண்டு.

ரத்தம், வியர்வை போன்ற உடல் திரவங்கள் மூலமாகவும், பாதிக்கப்பட்டவர்களின் புழங்கிய இடங்கள் மற்றும் பொருட்களில் வழியாகவும் இக்கிருமி பரவுகிறது.

இக்கிருமித்தொற்று ஏற்பட்டவர்களுக்கு முதலில் ஃப்ளூ ஜுரம் போன்ற அறிகுறிகள்தான் ஏற்படும் பின்னர் கண்கள், பற்களைச் சுற்றியுள்ள ஈறுகளிலிருந்து ரத்தக் கசிவு ஏற்படும்.

அடுத்தகட்டமாக உடலுக்குள்ளேயே ரத்தக்கசிவு ஏற்பட்டு, உடல் உறுப்புகள் செயலிழக்கும்.

இந்தக் கிருமித் தொற்று ஏற்பட்டவருக்கு உடலில் பாதிப்பு தோன்ற இரண்டு முதல் 21 நாட்கள் வரை ஆகலாம்.

இபோலா காய்ச்சலுக்கு தடுப்பு மருந்தோ, குணப்படுத்தும் மருந்தோ இதுவரை இல்லை.

இந்த கிருமித் தொற்றியவர்களில் தொண்ணூறு சதவீதம் பேர் உயிரிழக்க நேரிடும்.

ஆரம்பகட்டத்திலேயே மருத்துவமனை சென்றவர்கள்தான் உயிர் பிழைக்க சற்று அதிகமான வாய்ப்பு உள்ளது என்று கூறலாம். -BBC