காஸாவில் காணாமல் போனதாக கூறப்பட்ட இஸ்ரேலிய வீரர் மரணித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்..
23 வயதான ஹடார் கோல்டின் என்ற அவர் நேற்று முன்தினம் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.
அவரை ஹமாஸ் போராளிகள் கடத்திச் சென்றதாக கூறி, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 72 மணித்தியால மோதல் தவிர்ப்பையும் மீறி காஸா மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தியது.
இந்த இரண்டு நாட்களில் மாத்திரம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான பாலஸ்த்தீனியர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலனவர்கள் பொது மக்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அந்த வீரர் மரணடைந்துள்ளதாக இஸ்ரேல் தற்போது தெரிவித்துள்ளது. 23 வயதான கோல்டின் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற கடும் சண்டையில் மரணமடைந்ததாக இஸ்ரேல் இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.
கோல்டின் பெற்றோர் வசிக்கும் க்பார் சபாவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் உள்ளிட்டோர், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இஸ்ரேல் முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்காணோர் அந்த ராணுவ வீரரின் இல்லத்தில் குவிந்து அவருக்கான பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாலஸ்தினத்தில் உள்ள காஸா பகுதியில் செயல்படும் ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேல் அரசுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்றுவருகிறது. இஸ்ரேலின் இத்தொடர் தாக்குதலால் காஸா பகுதியில் ஏறத்தாழ 1600க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.