சீனாவில் தீவிரவாதிகள் தாக்குதல்: 37 பேர் பலி

xinjiangசீனாவில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஜின்ஜியாங் மாகாணத்தில் தீவிரவாதிகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலில் 37 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்தது.

ஜின்ஜியாங் மாகாணத்தின் ஷாஜி பகுதியில் கடந்த மாதம் 28ஆம் தேதி நடத்தப்பட்ட இந்தத் தாக்குலின்போது போலீஸார் நடத்திய எதிர் தாக்குதலில் 59 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக சீனாவின் ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இது குறித்து அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் ஜின்ஜியாங் பிராந்தியக் குழுத் தலைவர் ஜாங் சுன்ஜியான் சனிக்கிழமை கூறுகையில், “இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 215 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்’ என்றார்.

இந்தத் தாக்குதல் குறித்த தகவல்கள் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. எனினும் பொதுமக்களின் உயிரிழப்பு குறித்த விவரங்கள் அதில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

இந்நிலையில் சீன அரசு தற்போது வெளியிட்டுள்ள செய்தியில் “ஹான் இனத்தைச் சேர்ந்த 35 பேரும், உய்குர் இனத்தைச் சேர்ந்த 2 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தீவிரவாதிகள் இணைந்து நடத்திய திட்டமிட்ட தாக்குதல். சீனாவில் முதல் முறையாக வெளிநாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். “புனிதப் போர்’ என்ற பெயரில் தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலின் பின்னணி: இத்தாக்குதல் குறித்து போலீஸார் கூறியதாவது:

அண்மையில் சீனாவில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட மிகவும் மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது. கடந்த வாரம் திங்கள்கிழமை காலை 8 மணி அளவில் ஜின்ஜியாங் மாகாணத்தின் எலிக்ஸ்கு நகரில் போலீஸ் நிலையம் மற்றும் அரசு அலுவலகங்களில் கத்திகள் மற்றும் கோடரிகளுடன் புகுந்த தீவிரவாதக் குழுவினர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

மேலும், அந்தப் பகுதியிலுள்ள சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி, வாகனங்களை நிறுத்தினர். பின்னர் அந்தப் பகுதியில் வாகனங்களிலிருந்த பயணிகளை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதுடன், தங்களுடன் இணைந்து கலவரத்தில் ஈடுபடவும் தீவிரவாதிகள் தூண்டியுள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு எலிக்ஸ்கு நகர முஸ்லிம் தலைவரான நுராமத் சாவுட் மூளையாகச் செயல்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்துடன் (இடிஐஎம்) நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறார். இந்த இயக்கமானது அல்-காய்தா ஆதரவு இயக்கமாகும் என்று போலீஸார் தெரிவித்தனர்.