காஸா பகுதியிலிருந்து ராணுவத்தை திரும்பப் பெறும் நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியுள்ள நிலையில், காஸாவிலுள்ள ஐ.நா.பள்ளி மீது ஞாயிற்றுக்கிழமை அந்நாடு நடத்திய தாக்குதலில் 10 பேர் பலியாகினர். 30 பேர் காயமடைந்தனர்.
இது குறித்து காஸா பகுதி சுகாதாரத்துறை அமைச்சர் அஷ்ரஃப் அல் காத்ரா கூறுகையில், “எகிப்து எல்லையில் அமைந்துள்ள ரஃபா பகுதியில் போரால் பாதிக்கப்பட்டவர்கள் ஐ.நா.வால் தங்க வைக்கப்பட்டுள்ள பள்ளி மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர். முன்னதாக ஐ.நா. பள்ளி மீது இதேபோல் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது’ என்றார்.
ஐ.நா.பள்ளியில் உயிரிழந்த 10 பேர் உள்பட ரஃபா பகுதியில் 30 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து 27ஆவது நாளாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,712ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை எட்டியுள்ளது.
அதேபோல் இஸ்ரேல் தரப்பில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 64ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 400ஆகவும் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்புப்படை செய்தித்தொடர்பாளர் ரோனே கப்ளான் கூறுகையில், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான “ஆபரேஷன் புரொடக்டிவ் எட்ஜ்’ என்ற நடவடிக்கை இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
காஸா பகுதியிலுள்ள சாதக, பாதங்களை மதிப்பிட்டு வருகிறோம். எனவே முழுவதுமாக ராணுவ வீரர்கள் திரும்பப் பெறப்படமாட்டார்கள். நாங்கள் இன்னும் எச்சரிக்கையுடனே இருக்கிறோம்’ என்றார்.
வீரர் உயிரிழந்ததாக இஸ்ரேல் அறிவிப்பு: தங்கள் நாட்டு வீரரை தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை கடத்திச் சென்றதாகக்கூறி, அன்று அறிவிக்கப்பட்டிருந்த 72 மணி நேர போர் நிறுத்தத்தை மீறி மீண்டும் காஸா மீது கடும் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது. இந்தப் புகாரை ஹமாஸ் தீவிரவாதிகள் மறுத்து வந்த நிலையில், தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட அந்த வீரர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் அரசு சனிக்கிழமை அறிவித்தது.
“லட்சியத்தை அடையும் வரை சண்டையை நிறுத்த மாட்டோம்’
“எங்களது லட்சியத்தை அடையும் வரை இஸ்ரேலுக்கு எதிரான சண்டையை நிறுத்தமாட்டோம்’ என்று ஹமாஸ் தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர்.
இது குறித்து ஹமாஸ் தீவிரவாத இயக்க செய்தித்தொடர்பாளர் ஃபாஸி பர்ஹும் கூறுகையில், “எங்களது லட்சியத்தை அடையும் வரை இஸ்ரேலுக்கு எதிரான சண்டை தொடரும். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குழப்ப நிலையில் உள்ளார். இது அவர் உண்மையான நெருக்கடியை சந்தித்து வருகிறார் என்பதை காட்டுகிறது’ என்று தெரிவித்தார்.