லிபியாவில் உள்நாட்டுச் சண்டை தீவிரமடைந்து வருவதால், அந்நாட்டில் இருந்து தனது நாட்டவர் 110 பேரை கடற்படைக் கப்பல் மூலம் பிரிட்டன் அரசு திங்கள்கிழமை பாதுகாப்பாக வெளியேற்றியது.
இதுதொடர்பாக லிபியாவுக்கான பிரிட்டன் தூதர் மிச்செல் ஆரோன், டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மத்திய தரைக்கடல் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பிரிட்டன் கடற்படைக் கப்பலான ஹெச்.எம்.எஸ். எண்டர்பிரைஸ் மூலம், திரிபோலியில் இருந்து பிரிட்டன் நாட்டவர் 110 பேர் வெளியேற்றப்பட்டனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் வெளியுறவு அமைச்சகத்தின் அறிவிப்பில், “லிபியாவில் தொடர்ந்து சண்டை தீவிரமடைந்து வருவதால், அந்நாட்டுக்கான தூதரக நடவடிக்கைகளை தாற்காலிகமாக நிறுத்தி வைப்பது குறித்து பிரிட்டன் அரசு ஆலோசித்து வருகிறது. லிபியாவுக்கு பிரிட்டன் நாட்டவர் யாரும் செல்ல வேண்டாம் என்றும், அங்கிருக்கும் பிரிட்டன் நாட்டினர் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டு வீச்சில் இந்தியர் பலி: லிபியா தலைநகர் திரிபோலியில் தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தியதில் இந்தியர் ஒருவர் பலியானார்.
திரிபோலியில் உள்ள தனியார் நிறுவனத்தில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்த அவரது பெயர் சாலமன் டேனியல் (52) ஆகும். கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தைச் சேர்ந்த அவர், லிபியாவில் சண்டை தீவிரமடைந்து வருவதால், அங்கிருந்து இந்தியா திரும்பத் திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பணி முடிந்து தனது அறைக்கு சாலமன் திரும்பி வந்தபோது தீவிரவாதிகளின் வெடிகுண்டுத் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தார்.