ரஷியாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்திய பொருளாதாரத் தடை

americarussiaஅமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் ரஷியா மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையின் தாக்கத்தை அந்நாடு உணரத் தொடங்கியுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

எனினும், உக்ரைனில் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷியா தொடர்ந்து உதவிகளைச் செய்து வருகிறது என்றும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் அமெரிக்க வெள்ளை மாளிகைச் செய்தித் தொடர்பாளர் ஜோஸ் எர்னஸ்ட் திங்கள்கிழமை கூறியதாவது:

ரஷியாவின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையானது எந்த அளவுக்கு அந்நாட்டில் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அந்நாட்டுப் பொருளாதார புள்ளிவிவரங்களின் மூலம் நாங்கள் அறிந்துள்ளோம்.

ரஷியாவின் மத்திய வங்கியானது கோடிக்கணக்கான டாலரை செலவழித்து அந்நாட்டின் பண மதிப்பை ஸ்திரப்படுத்த முயற்சித்து வருகிறது.

ரஷியாவிலிருந்து பெருமளவில் முதலீடுகள் வெளியேறிவருகின்றன.

அதேவேளையில், அந்த நாட்டில் முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். ஏனெனில், அவர்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்ய முயற்சிக்கிறார்கள்.

தங்களது எல்லைப் பகுதியில் இருந்து உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு கனரக ஆயுதப் பரிமாற்றம் நடைபெறுவதை ரஷியா தடுக்க வேண்டும் என்று விரும்பினோம். ஆனால், அந்த விஷயத்தில் ரஷியா எத்தகைய உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஜோஸ் எர்னஸ்ட் கூறினார்.