ஈராக்கில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் முக்கிய நகரமான காரகோஷை ஐஎஸ் இஸ்லாமியத் தீவிரவாதிகள் கைப்பற்றியதையடுத்து, கிறிஸ்தவர்கள் பெரும் எண்ணிக்கையில் அந்நகரிலிருந்து வெளியேறிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நினேவே மாகாணத்தில் உள்ள காரகோஷ் நகரிலிருந்து குர்திஷ் படைகள் பின்வாங்கியதையடுத்து, ஒரே இரவில் ஐஎஸ் எனப்படும் “இஸ்லாமிய அரசு” குழுவினர் அந்நகரைக் கைப்பற்றினர்.
இதற்கிடையில், மவுண்ட் சின்ஜார் பகுதியில் ஐஎஸ் குழுவால் பிடித்துவைக்கப்பட்டிருந்த யாஸிதி என்ற சிறுபான்மை மதக்குழுவைச் சேர்ந்த 50,000க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுவிட்டதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
பாக்தாதிற்கு வடமேற்கில் 400 கி.மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் நினேவே மாகாணத்தில் பெரும் எண்ணிக்கையில் மதச் சிறுபான்மையினர் வசிக்கிறார்கள்.
ஜூன் மாதத்தில், வட பகுதியில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் தாக்குதலைத் தொடங்கியதையடுத்து, ஆயிரக்கணக்கானவர்கள் அங்கிருந்து வெளியேறும் கட்டாயத்திற்கு உள்ளானார்கள்.
நினேவேயில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் இரவோடு இரவாக வீடுகளை விட்டு வெளியேறிவிட்டதாக பாரிஸிலிருந்து செயல்படும் சர்வதேச கிறிஸ்தவ அமைப்பான “ஃப்ரெடெர்நைட் என் ஈராக்” தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர், குர்திஷ்ஸ்தான் தன்னாட்சிப் பகுதியை நோக்கி சென்றிருப்பதாக நம்பப்படுகிறது.
பேஷ்மெர்கா என்று அழைக்கப்படும் குர்திஷ் படையினர் பல வாரங்களாக ஐஎஸ் குழுவினருடன் சண்டையிட்டு வருகின்றனர்.
புதன் கிழமையன்று இரவு, காரகோஷ் நகர ஆர்க்பிஷப்பிடம், தாங்கள் அந்த இடத்தைவிட்டுச் செல்லப்போவதாக பேஷ்மெர்கா காமாண்டர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஐஎஸ் தீவிரவாதிகள், தேவாலயங்களில் இருக்கும் சிலுவைகளை இறக்கிவருவதோடு, மத நூல்களை எரிப்பதாகவும் காரகோஷில் இருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஈராக்கின் கிறிஸ்தவத் தலைநகரம் என்று அழைக்கப்படும் இந்த நகரம், மோசூல் நகரின் தென் கிழக்கே 30 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. மோசூல் நகரம் ஜூன் மாதம் ஐஎஸ் குழுக்களால் கைப்பற்றப்பட்டது.
இஸ்லாத்திற்கு மாற வேண்டும் அல்லது மரணத்தைச் சந்திக்க வேண்டுமென இஸ்லாமிய தீவிரவாதிகள் கெடு விதித்ததையடுத்து போன மாதம் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவக் குடும்பங்கள் மோசூல் நகரை விட்டு வெளியேறினர்.
கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் மவுண்ட் சின்ஜரிலிருந்து மீட்கப்பட்ட யாஸிதிகளுக்கு உதவ, பொருட்களைத் திரட்டிக்கொண்டிருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
கடந்த வார இறுதியில் சின்ஜர் நகரை ஐஎஸ் கைப்பற்றிய பிறகு, இந்த மதக் குழுவினர் தஞ்சக் கோரிக்கைவிடுத்தனர்.
அந்த நகரிலிருந்து 2 லட்சம் பொதுமக்கள் இடம்பெயர்ந்திருப்பதாக மனிதநேய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது.
மலைப் பகுதியில் சிக்கியிருப்பவர்கள் தண்ணீரின்றி அவஸ்தைப்பட்டுவருகின்றனர். ஏற்கனவே 40 குழந்தைகள் இறந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
ஈராக்கில்தான் உலகின் மிகப் பழமையான கிறிஸ்தவ சமூகங்கள் வசிக்கின்றன. 2003ஆம் ஆண்டில் அமெரிக்கா தலைமையில் படையெடுப்பு நிகழ்ந்த பிறகு, வகுப்புவாத வன்முறை அதிகரித்ததோடு, அங்கே கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையும் குறைய ஆரம்பித்தது.
இஸ்லாமிய கலீபா அரசை உருவாக்கும் நோக்கத்தோடு ஐஎஸ் குழு ஈராக், சிரியா நாடுகளின் பெரும் பகுதியை பிடித்துள்ளது.
டைக்ரிஸ் நதியின் குறுக்கில் கட்டப்பட்டிருக்கும் வியூக முக்கியத்துவம் வாய்ந்த மோசுல் அணையைத் தாங்கள் கைப்பற்றிவிட்டதாக ஐஎஸ் குழு சொல்கிறது. ஆனால், குர்திஷ் படையினர் தாங்கள்தான் அந்தப் பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
நாட்டின் வடபகுதியில் இருக்கும் கிர்குக் நகரில் ஷியா முஸ்லிம்கள் வழிபடும் மசூதிக்கு அருகில் ஒரு கார் வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
யாஸிதிகள் என்பது யார்?
இவர்களது இனமும் தோற்றமும் தொடர்ந்து விவாதத்திற்குரிய விஷயமாகவே இருக்கிறது.
ஜொராஸ்ட்ரிய மதம் உள்பட பல்வேறு மதத்தின் கூறுகளை இந்த மதம் உள்வாங்கியுள்ளது.
பல இஸ்லாமியக் குழுக்களும் பிற குழுக்களும் யாஸிதிகளை சாத்தான் வழிபாட்டாளர்களாக்க் கருதுகின்றனர்.
உலகம் முழுவதும் 5 லட்சம் யாஸிதிகள் வசிப்பதாக சொல்லப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் ஈராக்கின் நினேவே சமவெளியில் வசிக்கிறார்கள். -BBC
கடந்த 60 வருடங்களாக பாலஸ்தீன் மக்களை வந்தேறி யூதர்கள், பாலஸ்தீன் மக்களை அவர்களுடைய சொந்த மண்ணில் இருந்து வெளியேற்ற பல மாதரியான துன்புறுத்தல்களை கொடுத்து கொண்டு இருக்கிறார்கள், அதை எந்த நாடும் எந்த மீடியாவும் கண்டு கொள்வதில்லை, 60 வருட யூதர்களின் இன்னல்களை சகித்துக்கொண்டும் பொறுத்துக்கொண்டும் பாலஸ்தீன் மக்கள் இருக்கிறார்கள் என்றால் இறுதி வெற்றி பாலஸ்தினர்களுக்குதான் என்பது இதன் மூலம் புலபடுகிறது.
இஸ்லாமிய கலீபா அரசு உருவாகிவிட்டால் ஒரு வேளை அவர்களுக்கு நல்ல காலம் பிறக்கலாம். நல்லதே நடக்கும் என நம்புவோம்.
தோழருக்கு வரலாறு தெரியவில்லை. கடந்த காலத்தில் அரபுநாடுகள் ஒன்றாகக் கூடித் இஸ்ரேலைத் தாக்கித் தோல்விகண்ட வரலாறும் தெரியாமல் பேசுகிறீர் அய்யா. இப்போது நடந்த சண்டைக்குக் காரணம் என்ன தெரிமா?
மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியே ஏற்ப்படாது. இது இறைவனின் சாபம் போல தோன்றுகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள அனைவரும் ஒரு வகையல் சகோதர உறவுடையவர்களே. அவர்களின் வீட்டின் பிரச்சினையை அவர்களே தீர்த்துக்கொள்ள விட்டுவிட்டால், நிலைமை ஓரளவு சுமூகமாக தீரும் என்று நான் நினைக்கிறன். ஏதோ காரணங்களால் ஒருவருக்கு ஒருவரை உசுப்பி விட்டு அந்த சண்டையில் சுகம் காணுகின்றனர் சிலர் . வாழு, வாழவிடு என்று செயல்ப்பட்டால் உலகம் எப்படியிருக்கும்?” உலகம் சம நிலை பெறவேண்டும் உயர்வுதாழ்விலா நிலை வேண்டும், நிறைவே காணும் மனம் வேண்டும் இறைவா அதை நீ தரவேண்டும்.” என்றும் “அடுத்தவர் நலனை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுபதினம்”என்றும் தமிழ் பெரியோர் எழுதியும் பாடியும் உளர். இன்று மக்கள் தமது உறவு வட்டத்தை சுருக்கி கொண்டு இறுதியில் தான் மட்டுமே என்று மிகவும் பயங்கரமான சுயநல சூழலில் அகப்பட்டு தம்மையே அழித்துகொண்டிருக்கிரார்கள். இந்த சூழ்நிலையிலும் உலகத்தையும் அதில் வாழும் மனிதமும் இன்னும் நல்ல வகையாக வாழ்வதற்கு பல பல முயற்சிகளை எடுக்கின்றனர். ஆனாலும் மேலே போவதைவிட கீழ்நோக்கி செல்வது மிகவும் எளிது. மேலே செல்ல பலமடங்கு வலிமை தேவை. ஆக உலகம் மேலும் நலமாக இருக்க இன்னும் அதிகமானோர் செயலில் இறங்குவோம். மேலெழும் நல்லெண்ணங்கள் நிலைக்கும். கீழிழுக்கும் எதிர்மறை எண்ணங்கள் கீழ்நோக்கி கீழ்நோக்கி இறுதியில் மண்ணுக்குள் புதைந்து நன்மையே நிலைக்கும். இறைவன் நம் எல்லோரையும் ஆசீர்வதித்து இந்நிலைக்கு நம்மை வழிநடத்துவாராக.
எல்லாவற்றுக்கும் …காரணம் என்பது கண்கூடு.
இஸ்ராயேலரை இஸ்மாயேலர் வெற்றி பெற முடியாது என்பது சரித்திரம். உலகப் பொருளாதாரம் அவர்கள் கையில். அவர்களை எதிர்க்க யாரும் தயாராக இல்லை. நல்லது நடக்க வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு. வாய்ப் பேசிய டாக்டர் மகாதிர் ஆட்சியில் மலேசியாவின் பொருளாதாரத்தை தடாலடியாக தகர்த்தவர்கள். அவர்கள் எதையும் செய்யத் துணிந்தவர்கள். மனிதாபிமானம் இல்லாதவர்கள்! இது போதுமே!
எங்கு மதம் தலைவிரித்து ஆடுகிறதோ அங்கு அழிவு நிட்சயம் மனித நேயம் அழிந்து போகும் ,இச்சுழலில்அடுத்தவனையும் அழித்து தானும் மடிவான் இந்த மதங்களுக்குள் ஒருவருக்குகொருவர் சளைத்தவர்கள் அல்லா ?