ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள், குர்தீஷ்தான் பகுதியில் நான்கு கிறிஸ்தவ நகரங்களை கைப்பற்றியுள்ளனர்.
அங்கிருந்த ஒரு இலட்சம் கிறிஸ்தவர்களை வெளியேற்றினர். இதன்போது கிளர்ச்சியாளர்கள் பிடித்து வைத்துள்ள யாஷிடி இன மக்களுக்கு விமானம் மூலம் உணவுப்பொருட்களை வீசுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உத்தரவிட்டார்.
மேலும், குர்தீஷ் மாகாணத்தின் தலைநகர் எர்பில் நோக்கி கிளர்ச்சியாளர்கள் முன்னேறும் பட்சத்தில் அவர்கள் மீது குண்டு வீசி தாக்கவும் அமெரிக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், எர்பில் நகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்க படையினரின் முகாம் அருகில் போராளிகள் பீரங்கி தாக்குதல் நடத்தினர்.
எர்பில் நகரை பாதுகாத்து வரும் குர்திஷ் படையினரை குறிவைத்து இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதையடுத்து அமெரிக்க படைகள் உஷார்படுத்தப்பட்டன. கிளர்ச்சியாளர்கள் பீரங்கி வாகனம் மீது அமெரிக்கா 225 கிலோ எடைகொண்ட லேசர் வழிகாட்டி குண்டுகளை வீசியுள்ளன.
எங்கள் படைகளை அச்சுறுத்தினால் ஐ.எஸ்.ஐ.எல். கிளர்ச்சியாளர் மீது தாக்குதல் தொடரும் என்று பென்டகன் செய்தி தொடர்பாளர் எச்சரித்துள்ளார்.
ஈராக்கில் உள்ள தனது படைகளை திரும்ப பெற்ற பிறகு அமெரிக்கா தற்போது நடத்திய இந்த தாக்குதல் மிகவும் குறிப்பிடத்தக்க தாக்குதலாக கருதப்படுகிறது.