மனிதநேயப் பணி என்ற பெயரில் ரஷியப் படைகள் ஊடுருவ முயற்சி

russian-troops-ukraines-crimeaமனிதநேயக் குழுக்கள் என்ற பெயரில் மறைமுகமாக உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷியப் படைகள் ஊடுருவும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்று உக்ரைன் கூறியுள்ளது.

ரஷியாவின் இத்தகைய முயற்சி உக்ரைன் மீது போர் தொடுப்பதற்கான திட்டம் என்று மேலை நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.

இது குறித்து உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோஷென்கோவின் அலுவலக துணைத் தலைவர் வாலெரி சாலி தொலைக்காட்சி ஒன்றுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

உக்ரைன் எல்லையை நோக்கி பெருமளவிலான ரஷியப்படைகள், ராணுவத் தளவாடங்களுடன் முன்னேறியுள்ளன.

“அமைதிப்படை’ என்ற பெயரில் உக்ரைனில் உள்ள செஞ்சிலுவை சங்க குழுவுடன் இணைந்து மனிதநேயப் பணிகளை மேற்கொள்ளப் போவதாகக் கூறி கிழக்குப் பகுதியில் ரஷியப் படைகள் ஊடுருவ முயற்சித்து வருகின்றன.

ரஷியாவின் இத்தகைய நடவடிக்கை உக்ரைன் மீது முழு அளவிலான போர் தொடுப்பதற்கான மறைமுக வழியாகும்.

உக்ரைன் பிரச்னைக்கு ராஜீய ரீதியாக தீர்வு காண்பதைத் தவிர்க்கும் முயற்சியாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது

இது தொடர்பாக ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன், உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் பால்வோ கிலிம்கின் தொடர்புகொண்டு பேசினார். அப்போது அவரிடம், எல்லையில் ரஷியப் படைகளின் ஊடுருவல் முயற்சிகள் நிறுத்தப்படும் என்று லாவ்ரோவ் உறுதியளித்தார் என்று வாலெரி சாலி கூறினார்.

அமெரிக்கா குற்றச்சாட்டு: இதனிடையே, ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் சமந்தா பவர் கூறுகையில், “”உக்ரைன் கிழக்குப் பகுதியில் மனித நேய நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா தன்னிச்சையாக செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ரஷிய நடவடிக்கைகளை உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பாக கருத வேண்டி வேண்டும்” என்றார்.

உக்ரைன் கிழக்குப் பகுதியில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்காக போராட்டக் குழுவினரையும், கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களையும் ரஷியா தொடர்ந்து வழங்கி வருவதாக மேலை நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.