பாகிஸ்தானின் முக்கிய அண்டை நாடான இந்தியாவுடன் நல்லுறவு இல்லை என்று அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீஃப் வருத்தம் தெரிவித்தார்.
தலைநகர் இஸ்லாமாபாதில் தேசிய பாதுகாப்பு மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர்கள், மாகாண முதல்வர்கள், முக்கிய கட்சிகளின் தலைவர்கள், ராணுவ தலைமை தளபதி, உளவு அமைப்பான “ஐஎஸ்ஐ’யின் தலைவர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அந்த மாநாட்டில் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பேசியதாவது:
அண்டை நாடுகளுடன் பாகிஸ்தானுக்கு நல்லுறவு இல்லை. இந்தியாவுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள இதுவே நேரம். இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு, நட்புறவு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல உதவும் என்று நம்புகிறேன். ஆப்கானிஸ்தானுடனும் நல்லுறவை வளர்த்துக் கொள்ள பாகிஸ்தான் விரும்புகிறது. அந்நாட்டில் புதிதாக அமையவுள்ள தலைமை அதற்கு ஒத்துழைப்பு அளிக்கும் என்று நம்புகிறேன். நாட்டின் பொருளாதாரம் மாற்றத்துக்கு உள்ளாகி வருகிறது. மின்சாரப் பற்றாக்குறை மற்றும் தீவிரவாதம் ஆகிய இடர்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நவாஸ் ஷெரீஃப் பேசினார்.