உதவிப் பொருள்களுடன் உக்ரைன் புறப்பட்ட ரஷிய லாரிகள்

Ethnolingusitic_map_of_ukraineஉக்ரைன் மற்றும் மேலை நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு உக்ரைன் பகுதிக்கு நிவாரணப் பொருள்களுடன் 280 ரஷிய லாரிகள் செவ்வாய்க்கிழமை புறப்பட்டன.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையைத் தொடர்ந்து, ரஷிய அரசு அந்த வாகனங்களை அனுப்பியுள்ளது.

எனினும், அந்த வாகனங்களில் என்ன கொண்டு வரப்படுகின்றன என்பது குறித்து தங்களுக்குத் தெரியாது என செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளதால், இது கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதிகளுக்கு துருப்புகளை அனுப்புவதற்கு ரஷியா மேற்கொள்ளும் தந்திரமோ என்ற மேலை நாடுகளின் அச்சம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

2,0000 டன் எடைகொண்ட உதவிப் பொருள்களுடன் அந்த வாகனங்கள் உக்ரைனுக்கு செல்வதாக ரஷிய செய்தி நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

200-க்கும் மேற்பட்ட வெள்ளை நிற லாரிகள் மாஸ்கோவில் அணிவகுத்து நிற்கும் காட்சியை ஒளிபரப்பிய என்.டி.வி. தொûலைக்காட்சி, குழந்தைகளுக்கான உணவு முதல் படுக்கைகள் வரை பல்வேறு உதவிப் பொருள்கள் அந்த வாகனங்களில் ஏற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.

இதனிடையே, ரஷிய வாகனங்கள் குறித்து உடனடியாக கருத்துக் கூற உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.

ரஷியாவிலிருந்து உக்ரைனுக்குள் அந்த வாகனங்கள் கிளர்ச்சியாளர் வசமுள்ள லுஹான்ஸ்க் எல்லை வழியாக நுழையுமா, அல்லது அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கார்கிவ் எல்லை வழியாக நுழையுமா என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை.