எபோலா நோயால் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, அந்த அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், மேலும் 128 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. கினி, லைபீரியா, நைஜீரியா, சியரா லியோன் ஆகிய நாடுகளில் கடந்த ஆகஸ்ட் 11,12 தேதிகளில் 56 பேர் மரணமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் எபோலா நோய் தாக்குதலால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1,069 ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக, இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் மார்கரெட் சான் ஜெனீவாவில் புதன்கிழமை தெரிவித்ததாவது:
பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எபோலா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தினசரி மருந்து, உணவு உள்ளிட்ட உதவிகள் அளிக்க வேண்டியுள்ளது.
நோய் பரவுவதை தடுப்பது என்பது விரைவில் நடக்கக் கூடியதல்ல. இந்த அசாதாரண நோயின் பரவலைத் தடுக்க அசாதாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தற்போது சுகாதாரப் பிரச்னையாக உள்ள இந்த விவகாரம், கட்டுப்படுத்தப்படவில்லையானால், விரைவில் மனித இனத்துக்கே பெரும் பிரச்னையாக உருவெடுக்கும்.
முன்பு எப்போதும் காணாத வகையில், தீவிரமாகவும் சிக்கலானதாகவும் நோய் பரவல் ஏற்பட்டுவருகிறது. சிறு கிராமங்களில் எபோலா நோயாளிகளைக் காணும் அதே வேளையில், தலைநகங்களிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர்.
எந்தெந்த நகரங்களில் சர்வதேச விமான நிலையம் உள்ளதோ, அங்கெல்லாம் எபோலா பாதிப்புள்ளவர் வந்திறங்கும் பெரும் அபாயம் உள்ளது.
எனவே, நோயால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டுள்ள, கினி, லைபீரியா, சியரா லியோனில் பொதுமக்கள் நாடு விட்டு நாடு செல்வதைத் தடுக்கும் விதமாக, எல்லைப்பகுதிகள் மூடப்பட வேண்டும்.
அதே சமயத்தில், இதுபோன்ற தடுப்பு நடவடிக்கைகளால், கடுமையாக நோய் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மருத்துவ உதவி அளிப்பதிலும் சிக்கல் எழுந்துள்ளது. இதுவரை காணாத அளவில், மருத்துவ உதவி அளிப்பவர்களும் இந்நோயால் உயிரிழந்து வருவது கவலையளிக்கிறது. சுமார் 170 மருத்துவப் பணியாளர்கள் இந்நோயால் தாக்கப்பட்டுள்ள நிலையில், 80 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறினார்.
மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை எபோலா வைரஸ் எவ்வாறு தடுக்கிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம், நோயை குணப்படுத்தவும் நோய் தடுப்பு மருந்துகளை உருவாக்கவும் இயலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எபோலா வைரஸ் வேகமாகப் பரவக் கூடியது என்றாலும், இது காற்றில் பரவும் தொற்றுநோயல்ல. உலக சுகாதார அமைப்பின் கீழ் 12 உறுப்பினர்கள் கொண்ட நெறிமுறைக் குழுவானது, இந்நோயால் பாதிக்கப்பட்டவருக்கு பரீட்சார்த்தமான மருந்துகள் அளித்து குணப்படுத்த முயற்சிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.