காஷ்மீர் விவகாரத்தால்தான் இந்திய-பாகிஸ்தான் உறவில் நெருடல்

“காஷ்மீர் விவகாரத்தாலேயே இந்திய-பாகிஸ்தான் உறவில் பதற்றம் நிலவுகிறது. இருதரப்பு உறவை வலுப்படுத்த காஷ்மீர் விவகாரத்துக்கு அமைதித் தீர்வு காண வேண்டும்’ என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் வியாழக்கிழமை தெரிவித்தார்.

அந்நாட்டு சுதந்திர தின விழாவையொட்டி ஆற்றிய உரையில் இதுகுறித்து அவர் கூறியதாவது:

காஷ்மீர் விவகாரத்துக்கு அமைதியான முறையில் தீர்வு காண விரும்புகிறோம். இதனால் இருதரப்பு உறவில் நிகழும் பதற்றத்தை போக்க முடியும். அதன்மூலம் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான புதிய வழிகளை இந்தியாவும், பாகிஸ்தானும் கண்டறிய இயலும்.

அண்டை நாடுகளுடன் அமைதியை ஊக்குவிப்பதே எங்களது வெளியுறவுக் கொள்கையின் முக்கிய நோக்கமாகும்.

பாகிஸ்தான் அமைதியான நாடு. எங்கள் நாட்டினுள் அமைதியை ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம். எல்லைப் பகுதிகளில் அமைதி நிலவ நாங்கள் விரும்புகிறோம்.

ஆப்கானிஸ்தானிலும் நீடித்த அமைதி நிலவ வேண்டும். அதன்மூலம் அந்தப் பகுதியே வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில் ஈடுபட இயலும் என்று நவாஸ் ஷெரீஃப் கூறினார்.

ஜம்மு காஷ்மீருக்கு செவ்வாய்க்கிழமை சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகளைத் தூண்டிவிட்டு பாகிஸ்தான் தொடர்ந்து மறைமுகப் போரில் ஈடுபட்டு வருகிறது. நேரில் போரிட துணிவில்லாததால் இவ்வாறு மறைமுகப் போரில் பாகிஸ்தான் ஈடுபடுகிறது’என்று கடுமையாக விமர்சித்தார்.

இந்த நிலையில் நவாஸ் ஷெரீஃப் மேற்கண்டவாறு பேசியுள்ளார். முன்னதாக, “இந்தியாவுடன் நல்லுறவு ஏற்படாதது வருத்தமளிக்கிறது. அந்நாட்டுடனான நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள இதுவே நேரம்’ என்று சமீபத்தில் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழா நிகழ்ச்சியில் அந்நாட்டு முப்படைத் தளபதிகள், அமைச்சர்கள், தூதர்கள், உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.