ஈராக்கின் சிஞ்சார் மலையில் பார்வை பறிபோய், கோமா நிலையில் கைவிடப்பட்ட சிறுவன் மீட்பு

sinjarடமாஸ்கஸ், ஆக.16-

ஈராக்கின் சில நகரங்களை கைப்பற்றி தங்கள் வசமாக்கிக் கொண்ட ஐ.எஸ். எனப்படும் இஸ்லாமிய ஜிஹாதி போராளிகள் அப்பகுதியில் பேராதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

மோசூல் நகரின் பல இடங்களில் உள்ள கிருஸ்துவ தேவாலயங்களை இடித்து தரைமட்டமாக்கிய ஜிஹாதிகள், அப்பகுதியில் வசித்த கிருஸ்தவர்ளை ஊரை விட்டே விரட்டியடித்ததுடன், அப்பகுதியில் வாழும் முஸ்லிம் பெண்களின் மீதும் மதக் கட்டளை என்ற பெயரில் பெண்ணுறுப்பை சிதைத்தல் உள்பட ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து அட்டூழியம் செய்துக் கொண்டுள்ளனர்.

ஜிஹாதிகளால் ஊரை விட்டு விரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் சிஞ்சார் மலை உச்சியில் தஞ்சமடைந்து, குடிக்க நீரின்றியும், உண்ண உணவின்றியும் தவித்து வந்தனர்.

அமெரிக்க விமானப்படைகளின் உதவியுடன் அவர்களை குர்திஷ் படையினர் மீட்டனர். அவர்கள் மீட்கப்பட்ட இடத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் கோமா நிலையில் கிடந்த 8 வயது சிறுவனை உதவிக்கு சென்ற டாக்டர்கள் மீட்டுள்ளனர்.

அவனை தூக்கிக் கொண்டு மலையை விட்டு இறங்க முடியாது என்பதால் அவனது தாயார் மற்ற பிள்ளைகளை மட்டும் அழைத்துச் சென்று விட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

வலதுப்புற கை, கால் செயலிழந்து, இரு கண் விழிகளிலும் புண் ஏற்பட்டு, புரையோடிப்போய் பார்வையிழந்த நிலையில் உள்ள அந்த சிறுவனை காப்பாற்ற சிரியாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரி டாகடர்கள் போராடி வருகின்றனர். 50 டிகிரிக்கு அதிகமான வெயிலில் சுய நினைவின்றி, கோமா நிலையில் கிடந்தபோது கண்களில் மலைத்துகள்கள் கலந்த புழுதி மண் படிந்ததால் சிறுவனின் பார்வை பறிபோய் இருக்கலாம் என்று தெரிவித்த டாகடர்கள் எப்படியாவது இந்த செய்தியை அறிந்து, அவனது பெற்றோர் நிச்சயமாக வந்து சிறுவனை அழைத்துச் செல்வார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.