உக்ரைனின் கிழக்குப்பகுதியில் நடைபெற்று வரும் உள்நாட்டு சண்டையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ரஷியாவால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருள்களை உக்ரைனுக்குள் அனுமதிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் அவை உக்ரைன் எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
உக்ரைனின் கீவ் மற்றும் மேற்குப் பகுதிகளில் அரசு ஆதரவுப் படையினருக்கும், பிரிவினைவாத குழுக்களுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவும் விதமாக 200 லாரிகளில் நிவாரணப் பொருள்களை ரஷியா அனுப்பியுள்ளது.
எனினும் நிவாரணப் பொருள்கள் என்ற போர்வையில் கீவ் மற்றும் மேற்குப் பகுதிகளிலுள்ள ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு அந்நாடு ஆயுதங்களை அனுப்பலாம் என உக்ரைன் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
ஆனால் உக்ரைன் எல்லைப்படை வீரர்கள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளின் அனுமதிக்குப் பிறகே, இந்த நிவாரணப் பொருள்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டு, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று ரஷியா மற்றும் உக்ரைன் இடையே ஏற்கெனவே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இது குறித்து ரஷிய அவசரகாலத்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் சனிக்கிழமை கூறுகையில், “இந்த நிவாரணப்பொருள்கள் தொடர்பான பரிசீலனைக்கு உக்ரைன் அதிகாரிகள் ரஷியா வந்தால், அவர்களிடம் அனைத்து ஆவணங்களையும் வழங்க தயாராக உள்ளோம்’ என்றார்.