கடந்த சில தினங்களுக்கு முன்னர், உக்ரேன் கிழக்குப் பகுதியில் வாழும் மக்களுக்காக ரஷ்யா நிவாரணப் பொருட்களை வழங்கியிருந்து. 280 பார ஊர்திகள் மூலம் மக்களுக்கான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த பார ஊர்திகளில் ரஷ்ய இராணுவத்தினரும் பயணிப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இது தொடர்பான விரிவான விளக்கத்தினையும் அது பற்றிய ஆய்வினையும் லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியினூடாக ஆய்வாளர் சுதர்மா தெரிவித்திருந்தார்.
பனிப் போரின் முடிவில் சுமார் 23 வருடங்களிற்கு முன்பு சோவிய சாம்ராஜ்யம் சிதறுண்ட போது, அது 15 நாடுகளாக தங்களை உலக அரங்கில் பிரகடனப்படுத்தியிருந்தன. அந்த 15 நாடுகளில் ரஷ்யாவிற்கு அடுத்தபடியான பெரிய நாடாக உக்ரேனே உள்ளது.
உக்ரேன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பொருளாதார ஒப்பந்தத்தை ஏற்படுத்த முனைந்த போது, ரஷ்யா உக்ரேனில் ஒரு பதட்ட நிலையை தோற்றுவித்தது. இப்போது ரஷ்யா புதிய போரை கிளச்சியாளர்களின் ஊடாக ஆரம்பித்துள்ளது.
ரஷ்யா மீண்டும் தனது நில ஆதிக்கத்தை தக்கவைக்கவும் சோவியத் குடியரசில் அங்கமாக தன்னோடு இருந்த இதர 14 நாடுகளையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முயலும் ஒரு சம்பவமாகவே இந்தப் போரைக் கொண்டு செல்கிறது.
ரஷ்யாவின் படைபலம் இப்போது 8 லட்சமாக இருந்தாலும் அது அடுத்த வருடத்திற்கிடையில் அதனை 400 ஆயிரம் பேரால் அதிகரிக்கப்படப் போகின்றது. அத்தோடு 732 பில்லியன் டொலர்களை மேலதிகமாக அது பாதுகாப்புச் செலவீனங்களிற்காக கடந்த சில வருடங்களில் செலவளித்துள்ளது.
பொருளாதாரச் சிக்கலிலிருந்து உலகம் இப்போது தான் சற்றே மீண்டு வருகிறது. அமெரிக்கா இன்னமும் முழுமையாக பொருளாதாரச் சிக்கலிலிருந்து முழுமையாக மீளவில்லை. இவ்வாறானதொரு நிலையில் ஆப்கான், சிரியா, ஈராக் என அல்லற்பட்டுக் கொண்டிருக்கும் மேற்குலகம் ரஷ்யப் பிராந்தியத்தில் ஒரு போரரங்கைத் திறக்காது என்று இப்போதைக்கு நம்பலாம்.
ஆனால் களநிலை நாடுகளின் தற்பெருமை, ஆளுமை, உணர்ச்சிகர அரசியல் என பல வேறுபட்ட காரணிகளால் சிலவேளை ஒரு சில மணித்துளிகளிலேயே நாம் நினைக்காத அளவிற்குக்கூட மாறி விடலாம் என பல விடயங்களைத் தெரிவித்திருந்தார்.