குடியுரிமை அதிகாரிகளிடம் விசா பெறாமல் கள்ளத்தனமாக வெளிநாடுகளுக்கு செல்லும் நபர்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
செல்வ வளம் மிக்க நாடுகளுக்கு சென்றுவிட்டால் எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம் என பேராசை பிடித்த சிலர் சட்டத்தை மீறி சரக்கு பெட்டகத்தில் திருட்டுத்தனமாக பயணிக்கின்றனர்.
இதுபோன்ற நபர்களை தங்களுக்கு சாதகமாக்கி, அவர்களிடம் பணம் பறித்து கொள்வதற்காகவே உலகெங்கும் சிலர் செயல்பட்டு வருகின்றனர்.
கப்பல்களின் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சரக்குகளோடு, மனிதர்களையும் பொட்டலம் போல் ஏற்றி விடப்படுகின்றனர்.
ஆனால் போய் சேரும் வரை தங்களது உயிருக்கு உத்திரவாதம் உள்ளதா? என்பதை இப்படி கள்ளத்தனமாக பயணம் செய்பவர்கள் சிந்திப்பதில்லை என கூறப்படுகிறது.
இதனை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டில் சிறுபான்மையினத்தவராக வாழ்ந்து வரும் 15 சீக்கிய குடும்பங்களை சேர்ந்த 12 வயதுக்குட்பட்ட 13 குழந்தைகள், 8 பெண்கள் உள்பட மொத்தம் 35 பேர் பெட்டகம் ஒன்றில் அடைக்கப்பட்டு கப்பல் ஒன்றின் மூலம் ஐரோப்பாவுக்கு கடத்தப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவின் எஸ்ஸெக்ஸ் (Eslucas) பகுதியில் உள்ள டில்பரி (Tilbury) துறைமுகத்துக்கு அந்த கப்பல் வந்து சேருவதற்குள், சுமார் 18 மணி நேரம் காற்று நுழைய வழியில்லாத அந்த இரும்பு பெட்டகத்தில் மூச்சுத்திணறிய அந்த சீக்கிய குடும்பம் பெட்டகத்தின் சுற்றுச்சுவரை தட்டி ஓசை எழுப்பியுள்ளனர்.
அப்போது சத்தம் வந்த கண்டெய்னரை அடையாளம் கண்டுபிடித்து, திறந்துப் பார்த்தபோது, வியர்வை வெள்ளத்தில் மிதந்தபடி 34 நபர்கள் திணறியுள்ளனர் மற்றும் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து எஞ்சியிருந்த 34 பேரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதால், அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் இவர்கள் அனைவரும் தாங்களாகவே விரும்பி முன்வந்து அந்த இரும்புச் சிறையை ஏற்றுக் கொண்டனரா? அல்லது, வெளிநாடுகளில் இருக்கும் பெரும் செல்வந்தர்களுக்கு கொத்தடிமைகளாக விற்பதற்காக கடத்தப்பட்டார்களா? என்பது தொடர்பாக பிரித்தானிய பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
இதைப் போன்ற ஆபத்தான பயணங்களை மேற்கொள்பவர்களை ஊக்குவிக்கும் தரகர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் என்பதே மனித உரிமை ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.