இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் முடிவுக்கு வருவதற்கு முன்னதாகவே செவ்வாய்க்கிழமை இரவு காஸாவில் சண்டை தொடங்கியது.
இதனால், ஐந்து நாள்களாக அமைதி நிலவி வந்த காஸா பகுதி மீண்டும் போர்க்களமானது.
ஹமாஸ் இயக்கத்தின் ராணுவத் தலைவர் முகமது டீஃபின் இல்லத்தில் இஸ்ரேல் நிகழ்த்திய தாக்குதலில், அவரது மனைவியும், 7 மாத ஆண் குழந்தையும் உயிரிழந்தனர்.
இஸ்ரேலின் தாக்குதலில் புதன்கிழமை மட்டும் 11 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்துடன், இந்தச் சண்டையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,100-ஐ நெருங்கியுள்ளது.
போர் நிறுத்த முறிவு குறித்து இஸ்ரேலிய அதிகாரிகள் கூறுகையில், “”காஸாவிலிருந்து செவ்வாய்க்கிழமை 50 ஏவுகணைகளும், புதன்கிழமை 20 ஏவுகணைகளும் இஸ்ரேல் மீது வீசப்பட்டன” என்று தெரிவித்தனர்.
இந்த ஏவுகணைத் தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தாற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாகவே, சண்டை தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹமாஸ் ராணுவத் தலைவர்: ஹமாஸ் ராணுவத் தலைவர் முகமது டீஃப் இல்லத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிர் பிழைத்தாரா இல்லையா என்பது குறித்த உறுதியான தகவல் இதுவரை இல்லை.
பல ஆண்டுகளுக்கு முன்னர், இஸ்ரேலில் பல தற்கொலைப் படைத் தாக்குதல்களை நிகழ்த்த உத்தரவிட்டதாகக் குற்றச்சாட்டப்படும் அவர், பல படுகொலை முயற்சிகளிலிருந்து தப்பியுள்ளார்.
இதுகுறித்து இஸ்ரேல் உள்துறை அமைச்சர் கிடியான் சார் கூறுகையில், “”முகமது டீஃபைக் குறிவைத்தே அந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அவரை அழிக்க மற்றொரு சந்தர்ப்பம் கிடைத்தால் அதனையும் பயன்படுத்துவோம்” என்று கூறினார்.
“நரகத்தின் கதவுகளைத் திறந்துள்ளது இஸ்ரேல்’: இந்தத் தாக்குதல் குறித்து ஹமாஸ் இயக்கத்தின் ராணுவப் பிரிவான காஸம் பிரிகேட்ஸ் கூறுகையில், “முகமது டீஃப் இல்லத்தில் தாக்குதல் நிகழ்த்தியதன் மூலம் நரகத்தின் கதவுகளை இஸ்ரேல் திறந்துவிட்டுள்ளது’ என்று கூறியுள்ளது.
இஸ்ரேலில், டெல் அவிவ், ஜெருசலேம் உள்ளிட்ட பல நகரங்களில் ஏவுகணை எச்சரிக்கை ஒலி தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்தது.
காஸாவிலிருந்து ஏவப்பட்ட பல ஏவுகணைகளை நடுவானில் சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
பேச்சுவார்த்தை தோல்வி: இதற்கிடையே, எகிப்து தலைநகர் கெய்ரோவில் கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்த சமாதானப் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமலேயே முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் சார்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த குழுவினர், நாடு திரும்பப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாலஸ்தீன அதிகாரி ஒருவர் கூறுகையில், “”பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததற்கு இஸ்ரேலின் பிடிவாதம்தான் காரணம்” என்று குற்றம் சாட்டினார்.
எனினும், காஸாவிலிருந்து ஏவுகணைகள் வீசப்பட்டதுதான் பேச்சுவார்த்தையைத் தொடர முடியாமல் போனதற்குக் காரணம் என இஸ்ரேல் அரசின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
ஜூலை 8-ஆம் தேதி தொடங்கிய இந்தச் சண்டையில் 2,028 பாலஸ்தீனர்களும், 66 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.