ஏஜி 2010 அறிக்கை (1): மாராவின் களவாடித்தனம்

மிகுந்த வறிய நிலையிலுள்ளவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஒதுக்கப்பட்ட ரிம54 மில்லியன் நிதியை முற்றிலும் அவர்களுக்காகப் பயன்படுத்தாமல், வாங்கிய பொருள்களுக்கு சந்தை விலையை விட 100 க்கும் அதிகமான விகித விலையைக் கொடுத்து மாரா வாங்கியுள்ளது.

இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட 2010 ஆம் ஆண்டிற்கான தேசிய கணக்காய்வர் (ஏஜி) அறிக்கை அந்த நிதி ஒதுக்கீடு ஏழைகளின் வருமானத்தை அதிகரிப்பதற்காக இரண்டாவது பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது என்று கூறுகிறது.

அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள மாரா வாங்கிய சில பொருள்கள்:

கிளந்தானில் நடத்தப்பட்ட கேக் போன்றவை செய்வதற்கான பயிற்சிக்கு வாங்கப்பட்ட 1.சூட்டடுப்பிற்கு கொடுக்கப்பட்ட விலை ரிம1,200. சந்தை விலை ரிம419.

2.கேஸ் அடுப்பிற்கான இரு தீச்சுடர் பாகங்கள், ஒவ்வொன்றுக்கும் ரிம200 கொடுக்கப்பட்டது. சந்தை விலை ரிம59.90.

3.மடிப்பு படுக்கைகள் ரிம500. சந்தை விலை ரிம100.    

4. முடி கத்தரிக்கும் கருவிகள் ஓவ்வொன்றுக்கும் ரிம250 கொடுக்கப்பட்டது. சந்தை விலை ரிம79.

5.கலவை மிஷின் ரிம140. சந்தை விலை ரிம60.

மடிப்பு படுக்கைகள் பாரம்பரிய உடல்பிடிப்பு பயிற்சிக்காகவும், முடி கத்தரிக்கும் கருவிகள் தலைமுடி பராமரிப்பு பயிற்சிக்காகவும் வாங்கப்பட்டன.

வாங்கப்பட்ட பொருள்களில் பெரும்பாலானவை டெண்டர்கள் மூலமல்லாமல் நேரடி பேச்சுவார்த்தைகளின் மூலம் வாங்கப்பட்டதோடு நிதி அமைச்சின் ஒப்புதலையும் பெறவில்லை என்று ஏஜியின் அறிக்கை கூறுகிறது.

பொருள்கள் வாங்குவதற்கான நடைமுறை விதிகள் அப்பொருள்கள் வாங்கப்படுவதற்கு முன்பு மாரா இயக்குனர்கள் வாரியத்திடம் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் ஏஜியின் அறிக்கை கூறுகிறது.

(மேலும் தொடரும்)