அமெரிக்காவுக்கு ஆபத்து என்றால் ஐ.எஸ்.ஸூடன் நேரடி யுத்தம்

“ஐ.எஸ். பயங்கரவாதிகளால் அமெரிக்காவுக்கு ஆபத்து என்றால், அந்த அமைப்புடன் நேரடியாகப் போரிடுவோம்’ என அமெரிக்க கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதி மார்ட்டின் டெம்ப்ஸி கூறியுள்ளார்.

ராணுவ விமானமொன்றில் அவர் ஆப்கானிஸ்தானுக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் தற்போது இராக் மற்றும் சிரியா பகுதிகளுக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராகத் தாக்குதல் தொடுக்கும் திட்டம் எதுவும் அவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

ஒருவேளை அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகளுக்கு அவர்களால் ஆபத்து என திட்டவட்டமாகத் தெரிய வந்தால், அந்த அமைப்புடன் அமெரிக்க ராணுவம் நேரடியாகப் போரிட வேண்டும் என பரிந்துரைப்பேன்.

ஐ.எஸ்.ஸூக்கு எதிரான போரில், அருகிலுள்ள ஜோர்டான், சவூதி அரேபியா, துருக்கி ஆகிய நட்பு நாடுகள் எங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

ஈவு இரக்கமற்ற ஐ.எஸ். அமைப்பால், மேற்கண்ட எல்லா நாடுகளுக்கும் அச்சுறுத்தல் உள்ளது என்றார் மார்ட்டின் டெம்ப்ஸி.