உக்ரைன் போரில் ரஷியாவுக்கு நேரடிப் பங்கு: அமெரிக்கா குற்றச்சாட்டு

  • ரஷிய ஆதரவுப் படையினருக்கு எதிராகப் போராடுவதற்கு தன்னார்வ வீரர்களை அனுமதிக்க வலியுறுத்தி, உக்ரைன் தலைநகர் கீவில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்.
    ரஷிய ஆதரவுப் படையினருக்கு எதிராகப் போராடுவதற்கு தன்னார்வ வீரர்களை அனுமதிக்க வலியுறுத்தி, உக்ரைன் தலைநகர் கீவில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்.

உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் ரஷியா நேரடியாகப் பங்கேற்றுள்ளதாக அமெரிக்கா வியாழக்கிழமை குற்றம் சாட்டியது.

உக்ரைனின் தென்கிழக்கில், அரசுப் படைகள் வசமிருந்த பகுதிகளில் பலவற்றை ரஷியா ஆதரவுப் படையினர் கைப்பற்றியுள்ளதைத் தொடர்ந்து அமெரிக்கா இவ்வாறு கூறியுள்ளது.

இதுகுறித்து உக்ரைனுக்கான அமெரிக்கத் தூதர் ஜெஃப்ரி பியாட் தனது டுவிட்டர் வலைப்பதிவில் கூறுகையில், “”நாளுக்கு நாள் உக்ரைனில் அதிகரித்து வரும் ரஷிய துருப்புக்கள், அங்கு நடைபெறும் சண்டையில் நேரடியாகப் பங்கேற்கின்றனர்.

அதிநவீன எஸ்.ஏ.22 ஏவுகணைகள் உள்ளிட்ட தனது புத்தம் புதிய வான் பாதுகாப்புத் தளவாடங்களை ரஷியா, கிழக்கு உக்ரைன் பகுதிக்குள் அனுப்பியுள்ளது. இதன்மூலம், ரஷியா இந்தப் போரில் தன்னை நேரடியாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நான்கு மாதங்களாக உக்ரைனில் அரசு ஆதரவுப் படையினருக்கும், ரஷிய ஆதரவுப் படையினருக்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகிறது.

அதில் ஒரு மாபெரும் திருப்பமாக, கிழக்குப் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் பிடியிலிருந்த கணிசமான பகுதிகளை உக்ரைன் படையினர் அண்மையில் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து, ரஷியாவையொட்டிய உக்ரைனின் தென்கிழக்கு பகுதிகளிலிருந்து கிளர்ச்சியாளர்கள் எதிர்த் தாக்குதல் தொடுத்து வருகின்றனர்.

கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள டொனெட்ஸ்க் நகரை உக்ரைன் ராணுவம் நெருங்க முடியாத அளவுக்கு எறிகுண்டுத் தாக்குதல் நிகழ்த்தி வருவதாகவும், அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள மாரியுபோல் துறைமுக நகரை அச்சுறுத்தி வருவதாகவும் ரஷியா மீது உக்ரைன் குற்றம் சாட்டி வருகிறது.

ரஷியாவின் உதவியுடன் கிளர்ச்சிப் படையினர் முன்னேறி வருவதால், தங்களுக்கு நோட்டோ படைகள் உதவ வேண்டும் என்று உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைன் மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகளும் உக்ரைன் பிரச்னையில் ரஷியாவின் நேரடி தலையீடு இருப்பதாகக் கூறி வந்தன.

இந்நிலையில் உக்ரைனுக்கான அமெரிக்க தூதர் ஜெஃப்ரி பியாட்டும் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.