கெடா, அலோர் ஸ்டாரில் உள்ள ஒரு கெமாஸ் பாலர் பள்ளியில் ஒரு கழிப்பறை உலர்ந்த உணவைச் சேமித்து வைக்கப்படும் இடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சுகாதாரம் முறையாக பேணப்படாததற்கு இது ஓர் எடுத்துக்காட்டு எனத் தலைமைக் கணக்காய்வாளர் 2010 கணக்கறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
“உலர்ந்த உணவுப்பொருள்கள் நீண்ட காலத்துக்கு, காலாவதி தேதிக்குப் பின்னரும்கூட சேர்த்து வைக்கப்பட்டிருந்தன.அவை பூச்சிகளால் பாதிக்கப்படும் அபாயம் இருந்தது. சாயம் போன்ற இராசனப் பொருள்களுக்கு அருகில் அவை வைக்கப்பட்டிருந்தன”, என்று கணக்கறிக்கை கூறியது.
கோட்டா பாருவில் ஒரு பாலர் பள்ளியில் உணவு டின்களில் கரப்பான் பூச்சியின் எச்சங்கள் காணப்பட்டன.
கெமாஸ் பாலர் பள்ளிகள், கெமாஸ் தலைமையகமும் சுகாதார அமைச்சும் நிர்ணயித்துள்ள உணவுத் திட்டத்தையும் தயாரிப்புமுறைகளையும் பின்பற்றுவதில்லை.
தணிக்கை அதிகாரி சென்று பார்வையிட்ட 143 பாலர்பள்ளிகளில் 79-இல் அக்குறைபாடுகள் காணப்பட்டதாக அது கூறிற்று.
பாலர்பள்ளிகளுக்கு உணவுப்பொருள்கள் உரிய நேரத்தில் அனுப்பிவைக்கப்படாததால் உணவு தயாரிப்பு பாதிக்கப்படுகிறது.
கெமாஸ் நிதித்துறை, பாலர்பள்ளிகள் செலவழித்த பணத்தைக் கேட்டுக் கோரிக்கைகளைத் தாக்கல் செய்யும்போது 14 நாள்களுக்குள் அதைத் திருப்பிக் கொடுப்பதில்லை. கேலாங் பாத்தாவில் ஒரு பாலர்பள்ளிக்கு 66 நாள்கழித்துத்தான் பணம் கிடைத்துள்ளது.
கெமாஸ், மாணவர்களுக்கு மல்டி-வைட்டமின் மாத்திரைகளை வழங்க வேண்டும் என்பது விதி. ஆனால் அம்மாத்திரைகளை விநியோகித்து வந்த நிறுவனம் விநியோகத்தைத் திடீரென்று நிறுத்திகொண்டதை அடுத்து கடந்த இரண்டாண்டுகளாக அதை வாங்குவது நின்று போயுள்ளது.