காஸாவில் குண்டுச் சப்தங்கள் ஓய்ந்துவிட்டன.முக்கிய பிரச்னைகளுக்கு முடிவு எட்டப்படாமலேயே கடந்த மாதம் 8-ஆம் தேதி அங்கு இஸ்ரேல் தொடங்கிய “ஆப்பரேஷன் புரொடக்டிவ் எட்ஜ்’, கடந்த செவ்வாய்க்கிழமையோடு முடிவுக்கு வந்திருக்கிறது.
இந்த அமைதி எத்தனைக் காலத்துக்கு நீடிக்கும் என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், நடந்து முடிந்த போரில் வெற்றி யாருக்கு என்பதுதான் முதலில் தொக்கி நிற்கும் கேள்வி.
காஸா வீதிகள் வெற்றிக் கொண்டாட்டங்களால் நிரம்பி வழிகின்றன.
இஸ்ரேலோ, ஹமாஸ் இயக்கத்துக்கு தாங்கள் பேரழிவை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறுகிறது.
“”இஸ்ரேலுக்கு எதிரான பயங்கரவாதிகளுக்கு பலத்த அடி கொடுப்பதுதான் இந்தப் போரின் நோக்கம். அதை வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டோம். விரைவில் எங்களது நீண்ட கால நோக்கங்களையும் நிறைவேற்றுவோம்” என்கிறார் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.
ஆக, இரு தரப்பினருமே தாங்கள்தான் வெற்றியடைந்ததாகக் கூறிக்கொள்கின்றனர்.
ஆனால், உண்மையில் வெற்றி யாருக்கு?
பாலஸ்தீனப் பிரச்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு இஸ்ரேலின் ஆக்ரோஷத் தாக்குதலுக்கு இலக்காகி, பலத்த சேதத்தைச் சந்தித்துள்ள ஹமாஸூக்கா?
அல்லது, இத்தனைத் தாக்குதல்களுக்குப் பிறகும் ஹமாஸின் ஏவுகணை வீசும் திறனை அழிக்க முடியாத இஸ்ரேலுக்கா? சொல்லப்போனால், வெற்றியடைந்துவிட்டோம் என்ற திருப்தியின் காரணமாக இஸ்ரேலோ, ஹமாஸா போர் நிறுத்தத்துக்குச் சம்மதிக்கவில்லை.
இனியும் போரைத் தொடர்வதினால் தங்களுக்கு எந்தப் பலனுமில்லை என்பதை இரு தரப்பினரும் உணர்ந்ததே போர் நிறுத்தம் ஏற்பட்டதற்குக் காரணம். மரண ஓலங்களும், கல் குவியலாகிப் போன கட்டடங்களும்தான் ஹமாஸின் இத்தனை நாள் பிடிவாதத்துக்கு கிடைத்த பலன்.
இதுவரை இல்லாத அளவுக்கு உயிர்ச்சேதமும், பொருள் சேதமும் அந்த அமைப்புக்கு ஏற்பட்டிருக்கிறது.இஸ்ரேலைப் பொருத்தவரை, ராணுவத்தையும், உளவுப் பிரிவையும் அதிகம் நம்பாமல், தனது வானாதிக்க சக்தியை மட்டுமே நம்பி அந்நாடு நடத்திய தாக்குதலில் ஏராளமான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டது, இஸ்ரேல் எதிர்ப்பாளர்களின் வெறுப்புணர்வை மேலும் அதிகப்படுத்தி, எதிரிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியிருக்கிறது.
அந்த வகையில், இந்தப் போரினால் இரு தரப்பினருக்குமே தோல்விதான்.