கிழக்கு உக்ரைன் சண்டையில் 2,600 பேர் பலி: ஐ.நா. தகவல்

  • ரஷிய ஆதரவுப் படையினரிடமிருந்து உக்ரைன் கைப்பற்றியதாகக் கூறப்படும் ஆயுதங்களை கீவ் நகரில் வெள்ளிக்கிழமை பரிசோதிக்கும் சர்வதேச ராணுவப் பார்வையாளர்கள்.
    ரஷிய ஆதரவுப் படையினரிடமிருந்து உக்ரைன் கைப்பற்றியதாகக் கூறப்படும் ஆயுதங்களை கீவ் நகரில் வெள்ளிக்கிழமை பரிசோதிக்கும் சர்வதேச ராணுவப் பார்வையாளர்கள்.

கிழக்கு உக்ரைனில் அரசுப் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் நடைபெற்று வரும் சண்டையில் 2,600 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. அமைப்பு வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் இரு தரப்பினரும் சண்டையிடத் தொடங்கியதைத் தொடர்ந்து, சாவு எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்திருப்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அந்த அறிக்கையில், “”கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து புதன்கிழமை வரை அரசு ஆதரவுப் படையினருக்கும், ரஷிய ஆதரவுப் படையினருக்கும் இடையிலான சண்டையில் 2,593 உயிரிழந்தனர்.

அப்பகுதியில் ஆள்கடத்தல், சித்ரவதை போன்ற மனித உரிமை மீறல்களில் கிளர்ச்சியாளர்கள் ஈடுபடுகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேட்டோவில் இணைய உக்ரைன் விருப்பம்: இதற்கிடையே, நேட்டோ அமைப்பில் உறுப்பினராவதற்கு உக்ரைன் விருப்பம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டுப் பிரதமர் ஆர்செனி யாட்சென்யுக் வெள்ளிக்கிழமை கூறுகையில், “”உக்ரைனின் அணி சேராக் கொள்கையை மாற்றியமைத்து, நேட்டோ அமைப்பில் இணைவதற்கான மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படும்.

அந்த மசோதா நிறைவேறினால், நேட்டோ மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான தடையும் நீங்கும்” என்று தெரிவித்தார்.

உக்ரைன் வீரர்களை விடுவிக்க புதின் வலியுறுத்தல்:டொனெட்ஸ்க் நகரின் மேற்கிலுள்ள இலோவாய்ஸ்க் நகருக்கு வெளியே உக்ரைன் வீரர்கள் ஏறத்தாழ ஒரு வார காலமாக சிக்கியுள்ளனர். இந்நிலையில், ரஷிய அரசின் இணையதளத்தில் அதிபர் புதின் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “”தேவையற்ற உயிர்ச்சேதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, முற்றுகையிடப்பட்டுள்ள உக்ரைன் வீரர்களை மனிதாபிமான அடிப்படையில் கிளர்ச்சியாளர்கள் விடுவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கிளர்ச்சியாளர் தலைவர் ஒருவர் கூறுகையில், “”உக்ரைன் வீரர்கள் தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டால் மட்டுமே அவர்கள் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்படுவர்” என்று தெரிவித்தார்.