பாஸ் கொண்டு வந்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டது

அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழக சட்டத்துறைப் பேராசிரியர் அப்துல் அசிஸ் பேரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது மீது விவாதம் நடத்துவதற்கு மக்களவையில் பாஸ் கட்சி சமர்பித்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

அந்தத் தீர்மானத்தை சபாநாயகர் தமது அலுவலக அறையில் நிராகரித்தார்.

அந்தத் தீர்மானத்தை பாஸ் குபாங் கெரியான் உறுப்பினர் சலாஹுடின் அயூப் கடந்த வாரம் தாக்கல் செய்திருந்தார். மக்களவையின் நிரந்தர விதிகள் 18(1)ன் கீழ் சமர்பிக்கப்பட்ட அந்தத் தீர்மானம் “அவசரமான விவகாரம் அல்ல” என சபாநாயகர் பண்டிக்கார் அமின் முலியா கூறினார்.

“அசிஸ் பேரி மரியாதைக்குரிய பேராசிரியர், கல்வியாளர். அவரது கருத்துக்கள் என்னவாக இருந்தாலும் அவை அரசியலமைப்பு மீது அவருக்கு உள்ள அறிவாற்றலை அடிப்படையாகக் கொண்டவை”, என சலாஹுடின் நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

“அரசர் அமைப்பு முறையின் பங்கு குறித்து அவர் கருத்துத் தெரிவித்த போது அது அரசியலமைப்பை அடிப்படையாகக் கொண்டதாகும். கடந்த காலத்தில் தலைவர்கள் மோசமான கருத்துக்களைக் கூட வெளியிட்டுள்ளனர்” , என்றார் அவர்.

TAGS: