உக்ரைன் விவகாரம்: ரஷியா, நேட்டோ இடையே பதற்றம்

Ethnolingusitic_map_of_ukraineரஷியாவையொட்டிய உக்ரைன் பகுதியில் தனது வீரர்களை அனுப்ப நேட்டோ திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், உக்ரைன் எல்லையில் தனது ராணுவ வலிமையை அதிகரிக்கப் போவதாக ரஷியா அறிவித்துள்ளது.

இதனால், உக்ரைன் விவகாரத்தை மையப்படுத்தி ரஷியா, நேட்டோ நாடுகளுக்கிடையில் பதற்றம் உருவாகியுள்ளது.

பெல்ஜியம் தலைநகர் புருசெல்ஸில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது.

அப்போது கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள கிழக்கு உக்ரைன் பகுதியில் ரஷியா தனது சிறப்புப்படை வீரர்களை அனுப்பியிருப்பதாக, உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ குற்றம் சாட்டினார்.

அவர்களை வெளியேற்ற ஐரோப்பிய நாடுகள் ராணுவ உதவி அளிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்தக் கோரிக்கையை ஏற்க ஐரோப்பியத் தலைவர்கள் மறுத்துவிட்டனர்.

எனினும், நேட்டோ அமைப்பின் தலைவர் ஆண்டர்ஸ் ஃபாக் ரஸ்மஸ்ùஸன் கூறுகையில், “”கிழக்கு ஐரோப்பாவில் ரஷிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள, ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொண்ட நேட்டோ படை ஒன்று திரட்டப்படும்.

ஒரு சில நாள்களிலேயே இந்தப் படையை உக்ரைனுக்கு அனுப்ப முடியும்” என்று தெரிவித்தார்.

நியூயார்க் டைம்ஸ் நாளிதழில், “உக்ரைன் அதிரடிப் படையினருடன் நேட்டோ படைகளும் இணையும். சோவியத் யூனியனின் முன்னாள் உறுப்பினரான போலந்து உள்ளிட்ட புதிய நேட்டோ உறுப்பு நாடுகளின் வீரர்கள் அந்தப் படையில் இடம்பெறுவர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ரஷிய தேசிய பாதுகாப்பு கவுன்சில் துணைச் செயலர் மிகயில் பாபோவ் கூறியதாவது:

ரஷியாவுடன் பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அமெரிக்காவும், நேட்டோ உறுப்பு நாடுகளும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

எங்கள் நாட்டு எல்லையையொட்டி நேட்டோ உறுப்பு நாடுகளின் ராணுவக் கட்டமைப்புகள் நிறுவப்படுவது ரஷியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

அன்னிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக 2010-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ராணுவக் கொள்கையின் அடிப்படையில் ரஷியா தனது ராணுவ உத்தியை தீவிரப்படுத்தும் என்றார் மிகயில் பாபோவ்.

தேவையேற்பட்டால் ரஷியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதத்தைப் பயன்படுத்த ரஷியாவின் 2010-ஆம் ஆண்டு ராணுவக் கொள்கை அனுமதி அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு அறிக்கையில், ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கேய் ஷோய்கு கூறுகையில், “”ரஷிய ராணுவத்துக்குக் கூடுதல் வலிமை சேர்க்கும் வகையில், 230 புதிய ராணுவ ஹெலிகாப்டர்கள், ஜெட் விமானங்கள் ஆகியவை வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

பான் கீ-மூன் எச்சரிக்கை

தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக ரஷியாவும், ஐரோப்பிய நாடுகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருவது, பனிப் போருக்குப் பிறகு முதல் முறையாக இரு தரப்புக்கும் இடையில் மிகப் பெரும் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது.

கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இந்த சூழல் குறித்து கவலை தெரிவித்துள்ள ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ-மூன், “”உக்ரைன் பிரச்னைக்கு ராணுவ நடவடிக்கைகள் மூலம் தீர்வு காண முடியாது. உக்ரைனில் பதற்றத்தை அதிகரித்து, பேரழிவை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.