தற்கொலை தவிர்ப்பு சம்பந்தமாக உலக சுகாதார கழகம் முதல் தடவையாக வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகெங்கிலுமாக ஒவ்வொரு ஆண்டும் எட்டு லட்சம் பேர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள் என்று விவரம் வெளியிட்டுள்ளது.
இந்த எண்ணிக்கையில் முக்கால் வாசியளவு வறுமை அதிகமுள்ள நாடுகளில் இருந்து வருகிறது.
குறிப்பாக கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளில் தற்கொலைகள் மிகவும் அதிகமான எண்ணிக்கையில் நடக்கின்றன.
உலகில் நடக்கும் தற்கொலைகளில் மூன்றில் ஒரு பங்கு, வடகொரியா, இந்தியா இந்தோனேஷியா நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து வந்துவிடுவதாக இந்த அறிக்கை காட்டுகிறது.
விகிதாச்சார ரீதியில் அதிக தற்கொலை நடக்கும் நாடுகள் என்று பார்க்கையில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது. ஒரு லட்சம் பேருக்கு 28.5 தற்கொலைகள் என்ற விகிதத்தில் இலங்கையில் தற்கொலைகள் நடக்கின்றன. இதில் 11 இடத்தில் உள்ள இந்தியாவில் இந்த விகிதம் 21.1ஆக உள்ளது.
15 முதல் 29 வயது வரையிலானோரின் மரணங்களைப் பொறுத்தவரையில் முதல் பெரிய காரணி என்றால் அது தற்கொலைதான் என்றும், அதேநேரம் உலகில் பல இடங்களில் அதிகம் தற்கொலை செய்துகொள்வோர் என்றால் அது 70 வயதுக்கும் மேற்பட்டவர்கள்தான் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
உலக அளவில் பார்க்க தற்கொலை முயற்சியில் ஈடுபடும் பெண்களைக் காட்டிலும் ஆண்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகம் என்றும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
தற்கொலை வழிகள்
பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்துவிடுவது, தூக்குமாட்டிக்கொள்வது, துப்பாக்கியால் சுட்டுக்கொள்வது, நகர்ப்புறங்களைப் பொறுத்தவரை உயரத்தில் இருந்து குதித்துவிடுவது போன்றவை அடிக்கடி பயன்படுத்தப்படும் தற்கொலை வழிமுறைகளாக உள்ளன.
தற்கொலைக்குப் பயன்படக்கூடிய பொருட்களை உதாரணத்துக்கு பூச்சிக்கொல்லிகள், சில மருந்துவகைகள், துப்பாக்கிகள் போன்றவற்றை நினைத்தமட்டில் எளிதில் பெற முடியாது என்ற நிலையை உருவாக்கினால் தற்கொலைகளையும் தற்கொலை முயற்சிகளையும் குறைப்பதில் ஓரளவுக்கு வெற்றி காண முடியும் என்பதாக செல்வந்த நாடுகளின் அனுபவம் அமைந்துள்ளதென இந்த அறிக்கை கூறுகிறது.
பொது சுகாதாரப் பிரச்சினை
தற்கொலை என்பது ஒரு பெரிய பொது சுகாதாரப் பிரச்சினை என வர்ணித்துள்ள இந்த அறிக்கை, இதனை எதிர்த்துப் போராடவும், கட்டுப்படுத்தவும் வேண்டும் எனக் கூறுகிறது.
சுகாதார சேவை அமைப்புகள் தற்கொலைத் தவிர்ப்பை முக்கியமாகக் கருதி செயல்பட வேண்டும். ஏனெனில் மனநலப் பாதிப்புகள், மோசமான குடிப்பழக்கம் போன்றவை தற்கொலைகளுக்கு வழிவகுக்கும் விஷயங்களாக இருக்கின்றன.
உலக நாடுகள் பல தற்கொலைகளைத் தவிர்ப்பது தொடர்பில் பலனளிக்கவல்ல செயற்திட்டங்களைக் கொண்டிருக்கவில்லை என்றும் இந்த நிலை மாற வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
தற்கொலைகள் பற்றி செய்தி வெளியிடும்போது, அவற்றைப் பார்த்து மற்றவர்களும் அவ்விதமான காரியத்தில் இறங்கக்கூடும் என்ற ஆபத்து உள்ளது என்பதை ஊடகங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் இந்த அறிக்கை எச்சரித்துள்ளது. -BBC