ஆப்கன் உளவுத் துறை அலுவலகம் மீது தலிபான்கள் தாக்குதல்: 13 பேர் பலி

  • ஆப்கானிஸ்தானின் கஜினி நகரில் தலிபான்களின் தற்கொலைத் தாக்குதலுக்குள்ளான அரசு வளாகம். நாள்: வியாழக்கிழமை.
    ஆப்கானிஸ்தானின் கஜினி நகரில் தலிபான்களின் தற்கொலைத் தாக்குதலுக்குள்ளான அரசு வளாகம். நாள்: வியாழக்கிழமை.

ஆப்கானிஸ்தானில் அரசு வளாகம் மீது தலிபான்கள் வியாழக்கிழமை நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர்.

அந்நாட்டின் கஜினி நகரில், அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள வளாகத்துக்கு வெடிப்பொருள்கள் நிரப்பிய இரண்டு லாரிகளில் வியாழக்கிழமை அதிகாலை வந்த பயங்கரவாதிகள், வளாக வாயிலில் அவற்றை வெடிக்கச் செய்தனர்.

இதில், பணி முடிந்து தூங்கிக்கொண்டிருந்த 8 போலீஸார் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். 60 பேர் காயமடைந்தனர்.

குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, மேலும் 19 பயங்கரவாதிகள் வளாகத்தின் நுழைவுப் பகுதியில் துப்பாக்கித் தாக்குதலில் ஈடுபட்டனர்.

அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் திருப்பித் தாக்கியதில் அந்த 19 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

அந்த வளாகத்திலுள்ள உள்ளூர் உளவுத்துறை அலுவலகத்தைக் குறிவைத்தே பயங்கரவாதிகள் தாக்குலில் ஈடுபட்டதாக காவல்துறை துணைத்தலைவர் அஸதுல்லா இன்ஸாஃபி தெரிவித்தார்.

எரிபொருள் நிரப்பிய லாரி வெடித்ததால் ஏற்பட்ட அதிர்வில், கஜினி நகரிலுள்ள பல கட்டடங்களின் கண்ணாடி ஜன்னல்கள் நொறுங்கியதாகவும், 80 பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கஜினி மாகாண கவர்னர் மூஸா கான் அக்பர்ஜாதா தெரிவித்தார்.

தலிபான் பொறுப்பேற்பு: இந்தத் தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ஆப்கானிஸ்தானில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் குழப்பம் நீடித்து வருவதால் அந்நாட்டில் அரசியல் நெருக்கடி நிலவி வருகிறது.

மேலும், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட விவகாரங்களைக் குறித்து விவாதிக்க பிரிட்டனின் வேல்ஸில் நேட்டோ மாநாடு வியாழக்கிழமை தொடங்கும் நிலையில், தலிபான்கள் இத்தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர்.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தங்களது 13 கால ஆண்டு ஆக்கிரமிப்பின் பலன் என்று அன்னியர்கள் கூறி வந்த ஆப்கன் அதிபர் தேர்தல், தற்போது மாபெரும் தேசிய அவமானமாகியிருக்கிறது.

வேல்ஸில் நடைபெறும் நேட்டோ மாநாட்டில் புதிய ஆப்கன் அதிபரை பங்கேற்கச் செய்ய அவர்கள் திட்டமிட்டனர்.

ஆனால் அவர்களது திட்டம் தவிடுபொடியாகிவிட்டது’ எனக் கூறப்பட்டுள்ளது.