இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராட பல நாடுகளின் கூட்டணி அமைய வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
நேட்டோ நாடுகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல் இந்தக் கருத்தை வலியுறுத்திப் பேசினர்.
நேட்டோ நாடுகளின் வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்களிடையே ஜான் கெர்ரி பேசியது:
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு எதிராக ஒவ்வொரு நாடும் எந்த வகையில் தங்களது பங்களிப்பைச் செய்யும் என்று தெளிவாகத் திட்டமிட வேண்டும்.
பத்து நாடுகளைக் கொண்ட மையக்குழு ஒன்றை அமைக்க வேண்டும். ராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஐ.எஸ். பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வேண்டும் என்றார்.
மேலும், நேட்டோ உறுப்பினர் நாடுகளில் சில நேரடியாக ராணுவத் தாக்குதலில் ஈடுபட விரும்பவில்லை என்பதால், தளவாடங்கள் அளிப்பது, உளவுத் தகவல் போன்றவற்றை அளிக்கலாம் என்றார்.
அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல் பேசும்போது, நேட்டோ நாடுகளிடம் போதிய ராணுவ பலமும் தொழில்நுட்பமும் உள்ளது என்றும் சண்டையிடுவதற்குத் தேவையான உறுதியான மனப்பான்மைதான் இப்போது தேவை என்று குறிப்பிட்டார்.
இன்னும் இரண்டு வாரங்களில் ஐ.நா. பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், ஐ.எஸ். விவகாரத்தில் ஒரு புதிய வியூகத்தைத் திட்டமிட அமெரிக்கா முயன்று வருகிறது.