உக்ரைனில், ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதாக, அந்த நாட்டின் அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
இதையடுத்து, உக்ரைனில் அரசுப் படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 5 மாதங்களாக நிகழ்ந்து வந்த சண்டை முடிவுக்கு வந்துள்ளது.
இது தொடர்பாக, பெலாரஸ் நாட்டின் மின்ஸ்க் நகரில் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில், உக்ரைன் அதிபர் பொரொஷென்கோ சார்பில் அரசு அதிகாரிகள், கிளர்ச்சியாளர்கள் தரப்பில் அலெக்சாண்டர் ஸாகார்ஷென்கோ (டொனெட்ஸ்க் பிராந்தியம்), இகோர் பிலோத்நித்ஸ்கி (லூஹான்ஸ்க் பிராந்தியம்), ஐரோப்பிய பாதுகாப்பு-ஒத்துழைப்பு அமைப்பைச் சேர்ந்த ஹூடி தக்லியாவினி, ரஷியப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது, போர்நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டு அனைத்துப் பிரதிநிதிகளும் கையெழுத்திட்டனர். அதையடுத்து அதிபர் பொரொஷென்கோ கூறுகையில், “”போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்று வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணி முதல் உக்ரைன் படைகள் தாக்குதலை நிறுத்தியுள்ளன” என்றார்.
கடந்த ஏப்ரல் மாதம் மத்தியில் உக்ரைன் கிழக்குப் பகுதியில் அரசு படைக்கும், ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்று வந்த மோதலால், சுமார் 2,600 பேர் உயிரிழந்திருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.