ஐ.எஸ்.ஸை ஒடுக்க செயல்திட்டம்: நாளை வெளியிடுகிறார் ஒபாமா

isis-genocideஇஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பை எதிர்கொள்வதற்கான செயல்திட்டத்தை புதன்கிழமை  (செப். 10) வெளியிடுவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

ஐ.எஸ். பயங்கரவாதிகளால் எழுந்துள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான செயல்திட்டம் தயாராக உள்ளது.

அதுகுறித்த அறிவிப்பை புதன்கிழமை வெளியிடுவேன்.

இராக் போரைப் போன்று, ராணுவத் துருப்புகளை நேரடியாக சண்டையில் ஈடுபடுத்தும் நடவடிக்கைகள் அதில் இடம் பெறாது.

கடந்த ஆறேழு ஆண்டுகளாக, பயங்கரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைப் போன்றதொரு செயல்திட்டமாக அது இருக்கும்.

அரசின் செயல்திட்டத்துக்கு, நாடாளுமன்றம் அனுமதியளிக்கும் என நம்புகிறேன்.

ஐ.எஸ்-ஸூக்கு எதிரான நடவடிக்கைகளைக் கச்சிதமாக மேற்கொள்வதற்காக, கடந்த சில மாதங்களாகவே, அந்த அமைப்பு குறித்த உளவுத் தகவல்களைச் சேகரித்து வருகிறோம்.

இராக்கிலுள்ள அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்க தூதரகங்களைப் பாதுகாப்பற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

விமானத் தாக்குதல்கள் மூலம், தூதரகம் அமைந்துள்ள எர்பில் நகரம் பயங்கரவாதிகளிடம் வீழ்ந்துவிடாமல் பாதுகாத்துள்ளோம்.

இராக்கில் அமெரிக்கர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோருக்கு மின்சாரம், குடிநீர் வழங்கி வரும் மொசூல் அணையையும் மீட்பதற்கு உதவினோம் என்றார் ஒபாமா.

பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகப் போரிட அரபு நாடுகள் முடிவு

ஐ.எஸ். மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள அரபு நாடுகளின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற அந்த அமைப்பின் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.

அத்தீர்மானத்தில், அரபுப் பகுதிகளில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் குழுக்களுக்கு எதிராக கூட்டாகவோ, தனித் தனியாகவோ ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் தாக்குதல்களுக்கு அத்தீர்மானத்தில் வெளிப்படையான ஆதரவு தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக, கூட்டமைப்பின் பொதுச் செயலர் நபில் அல் அரபி செய்தியாளர்களிடம் கூறுகையில், “உறுப்பு நாடுகளில் ஏதாவது ஒன்றின் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல், அனைத்து நாடுகளின் மீதும் நிகழ்த்தப்படும் தாக்குதலாகக் கருத தீர்மானிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

“ஐ.எஸ். ஒரு கிரிமினல் இயக்கம்’: இதற்கிடையே, ஐ.எஸ். ஒரு கிரிமினல்களின் அமைப்பு என சன்னி பிரிவு முஸ்லிம்களின் தலைமையகமான எகிப்தின் அல்-அஸôர் கூறியுள்ளது.

அந்த அமைப்பின் தலைவர் ஷேக் அகமது அல்-தய்யப் கூறுகையில், “”ஐ.எஸ். அமைப்பு உலகம் முழுவதும் முஸ்லிம்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தித் தந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.