பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் வெள்ள நிவாரண உதவிகளைச் செய்ய முன்வந்த, பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் திங்கள்கிழமை நன்றி தெரிவித்தார்.
கடந்த சில நாள்களாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு ஏராளமானோர் பலியானார்கள். பலரைக் காணவில்லை.
இந்நிலையில், “”பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க இந்தியா தயாராக இருப்பதாக” நவாஸ் ஷெரீஃப்புக்கு மோடி ஞாயிற்றுக்கிழமை கடிதம் அனுப்பியிருந்தார்.
இதையடுத்து மோடிக்கு நவாஸ்
ஷெரீஃப் அனுப்பிய பதில் கடிதத்தில் கூறியிருப்பதாவது: “”பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி அளிக்க முன்வந்த தங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்
கொள்கிறேன். பேரிடர் மேலாண்மையில் ஒத்துழைப்பு அளிப்பதன் மூலம், அந்தப் பகுதியில் அமைதியும், வளர்ச்சியும் ஏற்படும்” என்று நவாஸ் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் மழை: பலி 200-ஆக உயர்வு
பாகிஸ்தானில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட விபத்துகளிலும், வெள்ளத்திலும் சிக்கி 200 பேர் உயிரிழந்துள்ளனர். 400 பேர் காயமடைந்தனர்.
கடந்த நான்கு நாள்களாக பெய்து வரும் மழையால், அந்நாட்டின் பஞ்சாப் மாகாணம் பெருமளவு பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
பஞ்சாப் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக குஜ்ராத், குஜ்ரன்வாலா மற்றும் சியால்கோட் மாகாணங்களில் ஓடும் செனாப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பஞ்சாப் மாகாணத்தில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் மூழ்கின.
ஏராளமான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
அதனைத் தொடர்ந்து பஞ்சாப் மாகாண அரசு “வெள்ள நெருக்கடி நிலை’யை அறிவித்துள்ளது.
மழை காரணமாக பஞ்சாபில் 130 பேரும், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 64 பேரும், வட பகுதியில் 10 பேரும் உயிரிழந்ததாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது.