ஆப்கன் அதிபர் பதவி வேட்பாளர்கள் மோதலைக் கைவிட வேண்டும்

AbdullahAbdஆப்கானிஸ்தானில் நடந்து முடிந்த அதிபர் தேர்தல் முடிவுகள் தொடர்பாக இரு முன்னணி வேட்பாளர்களும் மோதலில் ஈடுபடுவதைக் கைவிட வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஹமீது கர்சாய் வலியுறுத்தியுள்ளார்.

தலைநகர் காபூலில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் அவர் செவ்வாய்க்கிழமை கலந்து கொண்டார்.

அப்போது அங்கிருந்த அதிபர் வேட்பாளர் அப்துல்லா அப்துல்லாவின் ஆதரவாளர்கள், கோஷமெழுப்பி நிகழ்ச்சிக்கு இடையூறு விளைவித்தனர்.

அதனைத் தொடர்ந்து கர்சாய் பேசுகையில், “”தேர்தல் முடிவுகள் தொடர்பாக மோதலில் ஈடுபட்டுள்ள அதிபர் பதவி வேட்பாளர்கள் அப்துல்லா அப்துல்லாவும், அஷ்ரஃப் கனி அகமதுசாயும் ஒன்றுபட வேண்டும்.

அவர்கள் நினைத்தால் ஓரிரு நாள்களிலேயே தங்களுக்குள் ஒப்பந்தத்தை மேற்கொண்டு, ஒரே வாரத்தில் அரசு அமைக்க முடியும்” என்று கூறினார்.

ஆப்கானிஸ்தானில் ஹமீது கர்சாய்க்குப் பிறகு புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் அண்மையில் நடைபெற்றது. அதன் முதல் சுற்றில் தேசியக் கூட்டணி வேட்பாளர் அப்துல்லா அப்துல்லா முன்னிலை பெற்றாலும், அறுதிப் பெரும்பான்மை பெறாததால் இரண்டாவது சுற்று வாக்குப் பதிவு நடைபெற்றது.

அதில் சுயேச்சை வேட்பாளர் அஷ்ரஃப் கனி, 56.4 சதவீத வாக்குகளுடன் முன்னிலை பெற்றார்.

எனினும், இறுதிச் சுற்று வாக்குப் பதிவில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, அப்துல்லா அப்துல்லா அந்த முடிவுகளை ஏற்க மறுத்தார்.

அதனால் அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டது.

இந்த விவகாரத்தில் சமரசம் ஏற்படுத்தும் முயற்சியாக, ஐ.நா. மேற்பார்வையில் வாக்குகளை மறு எண்ணிக்கை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், மறு எண்ணிக்கை முடிவுகளை ஏற்கப்போவதில்லை என அப்துல்லா அப்துல்லா திங்கள்கிழமை அறிவித்தார்.

எனவே, அந்த முடிவும் அவருக்கு சாதகமானதாக இல்லை எனக் கூறப்படுகிறது.