ஏஜி அறிக்கை: “பைனாகுலர் விலைகள் 29 மடங்கு உயர்வு”

மலேசிய கடல் பூங்காத் துறை, இரவு நேரத்தில் பார்ப்பதற்குப் பயன்படுத்தப்படும் இரண்டு கடல் துறை பைனாகுலர்களை கொள்முதல் செய்வதற்கு அதன் சந்தை மதிப்பான 1,940 ரிங்கிட்டை விட 28 மடங்கிற்கு மேல் அதாவது 56,350 ரிங்கிட்டைச் செலவு செய்துள்ளது.

அதே வேளையில் இரவு நேரத்தில் பயன்படுத்தப்படும் இரண்டு புஷ்னெல் ரக பைனாகுலர்களை வாங்குவதற்கும் அதே தொகை கொடுக்கப்பட்டுள்ளது. அந்த விலை  அதன் உண்மையான விலையான 2,827 ரிங்கிட்டை விட 1,893 விழுக்காடு கூடுதலாகும்.

அதே போன்று அதிக விலைக்கு மடிக்கணினியும் வர்ண பிரிண்டரும் 11,845 ரிங்கிட்டுக்கு வாங்கப்பட்டுள்ளது. அதன் உண்மையான விலை 3,428 ரிங்கிட் (246 மடங்கு கூடுதல்). அரசாங்கத் தலைமைக் கணக்காய்வாளருடைய ஆண்டறிக்கையில் அந்த விவரங்கள் காணப்படுகின்றன.

கடல் பூங்காத்துறை பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கு முன்னர் சந்தை ஆய்வுகளை நடத்தியதற்கான ஆதாரமே இல்லை எனவும் அந்த அறிக்கை குறிப்பிட்டது. என்றாலும் விலை மதிப்பீடு நடத்தப்பட்டுள்ளது. ஆனால் எப்படிக் கணக்கிடப்பட்டது என்பதை அந்தத் துறையால் உறுதி செய்ய முடியவில்லை என்றும் அது கூறியது.

புதிதாக கட்டப்பட்ட படகுக்கு தேவைப்பட்ட அந்தப் பொருட்களை அந்தத்துறை பெற்றுக் கொண்டதாகக் கூடத் தெரியவில்லை. அந்த படகை வடிவமைத்து நிர்மாணிக்கும் பொறுப்பு கெஜுருத்ரான் கப்பால் மாசாய் சென் பெர்ஹாட் என்னும் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்தக் குத்தகை மதிப்பு 7.51 மில்லியன் ரிங்கிட் ஆகும்.

எல்சிடி டிவி, டிவிடி சாதனத்துக்குப் பதில் 195 ரிங்கிட் பெறும் பிலிப்ஸ் டிவிபி 3560கே ரக சாதனம் பொருத்தப்பட்டது. இரவு நேர பைனாகுலர்,  கடல் 137507 ரக பைனாகுலராக மாற்றப்பட்டது. அதில் இரவு நேரத்தில் பார்க்கும் வசதி இல்லை.

அதற்கு 15 குதிரை சக்தி ஆற்றலைக் கொண்ட இரண்டு ஸ்டிரோக் எந்திரம் பொருத்தப்பட்டது. ஆனால் குத்தகையின் படி 15 குதிரை சக்தி ஆற்றலைக் கொண்ட 4 ஸ்டிரோக் எந்திரம் வழங்கப்பட வேண்டும்.

“ஊழியர்களுடைய உயிர் பணயம் வைக்கப்பட்டுள்ளது”

ஒப்படைக்கப்பட்ட படகும் தேவைப்பட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யவும் தவறி விட்டது. அதன் ஆயிரம் லிட்டர் தண்ணீர் தொட்டி, 600 லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது.

அதன் அவசரக் கதவுகள் இரு புறமும் திறக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவற்றை இப்போது ஒரு பக்கம் மட்டுமே திறக்க முடியும். அத்துடன் அந்தக் கதவுகள் 18 திருகாணிகளுடன் பிணைக்கப்பட்டுள்ளன.

“அந்த அவசரக் கதவைத் திறப்பதற்கு 20 நிமிடம் பிடிப்பதை கணக்காய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். அவசரமான சூழ்நிலை ஏற்பட்டால் ஊழியர்களுடைய உயிர்களுக்கான அபாயம் அதனால் அதிகரித்துள்ளது.”

அத்துடன் 42 நாட்கள் தாமதமாக அந்தப் படகு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனால் குத்தகையாளர் நாள் ஒன்றுக்கு 1,253.24 ரிங்கிட்டை அபராதமாகக் கொடுக்க வேண்டும். ஆகவே 42 நாட்களுக்கு மொத்த அபராதத் தொகை 52,594.52 ரிங்கிட் ஆகும்.

ஆனால் 23,792.56 ரிங்கிட் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 28,801.52 சென்னுக்கு கணக்கு இல்லை என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.