ரஷிய ஆதரவுப் பகுதிகளுக்கு கூடுதல் சுய அதிகாரம்

  • உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியிலுள்ள டிபால்ட்சேவே நகரில், தூரத்தில் ஒலித்த துப்பாக்கி வெடிச் சப்தத்தை கேட்டு, எச்சரிக்கையாய் குனியும் உக்ரைன் வீரர். நாள்: செவ்வாய்க்கிழமை.
    உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியிலுள்ள டிபால்ட்சேவே நகரில், தூரத்தில் ஒலித்த துப்பாக்கி வெடிச் சப்தத்தை கேட்டு, எச்சரிக்கையாய் குனியும் உக்ரைன் வீரர். நாள்: செவ்வாய்க்கிழமை.

உக்ரைனில், ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் நிறைந்த கிழக்கு உக்ரைன் பகுதிகளுக்கு கூடுதல் சுய அதிகாரம் வழங்க அந்நாட்டு அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ உறுதியளித்துள்ளார்.

எனினும், பாதுகாப்பு, தேர்தல் ஆகியவற்றின் மீதான அதிகாரங்களை அந்தப் பகுதிகளுக்கு வழங்கும் “ஃபெடரல்’ முறைக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தலைநகர் கீவில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பெட்ரோ பொரொஷென்கோ கூறியதாவது:

கிளர்ச்சி நடைபெறும் பகுதிகளுக்கு கூடுதல் சுய அதிகாரம் வழங்கும் மசோதா, அடுத்த வாரத்துக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

கூடுதல் அதிகாரங்கள் பெற்றாலும், உக்ரைனின் அங்கமாகவே அப்பகுதிகள் தொடரும்.

கிளர்ச்சியாளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில், உக்ரைனின் ஒருமைப்பாட்டில் துளியும் சமரசம் செய்துகொள்ளப்படவில்லை.

டொனெட்ஸ்க் உள்ளிட்ட கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் பகுதிகள் மீதான உக்ரைனின் உரிமை விட்டுக் கொடுக்கப்படவில்லை.

அந்த ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை அமலுக்கு வந்ததிலிருந்து, உக்ரைனிலிருந்த 70 சதவீத ரஷியத் துருப்புக்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்பிச் சென்றுள்ளனர்.

கிளர்ச்சியாளர்கள் பிடியிலிருந்த 700 உக்ரைன் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வார இறுதிக்குள் மேலும் 500 பேர் விடுவிக்கப்படுவார்கள்.

உக்ரைன் படையினரை சீண்டும் விதமாக கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல் நிகழ்த்தி வருவதால், போர் நிறுத்தத்தை தொடர்வது சிரமமாக உள்ளது என்றார் பெட்ரோ பொரொஷென்கோ.

கிழக்கு உக்ரைன் சுயாட்சிப் பகுதிகளுக்கு என்னென்ன கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படும் என்பது குறித்து தனது உரையில் பொரொஷென்கோ தெளிவாகக் குறிப்பிடவில்லை.

எனினும், ஏற்கெனவே விவாதிக்கப்பட்ட சமரசத் திட்டத்தில், சுயாட்சிப் பகுதிகளில் ரஷிய மொழியை பாதுகாத்திடவும், உக்ரைன் போலீஸாருடன் உள்ளூர் போலீஸாரும் இணைந்து காவல் பணியில் ஈடுபடவும் உக்ரைன் அரசு ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.

மேலும், சுயாட்சிப் பகுதிக்கான கவர்னரை நியமிக்க, உள்ளாட்சித் தலைவர்களின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்ற நிபந்தனையையும் உக்ரைன் ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. எனினும், அந்தப் பகுதிகளுக்கான பாதுகாப்புப் பொறுப்பையும், கவர்னரைத் தேர்ந்தெடுப்பதற்கான அதிகாரத்தையும் தங்களுக்கு வழங்க வேண்டுமென்று கிளர்ச்சியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கிளர்ச்சிக் குழுக்கள், உக்ரைன் நாடாளுமன்றம் ஆகிய இரண்டையும் திருப்திப்படுத்தக்கூடிய சுய அதிகார மசோதாவைத் தயாரிக்க வேண்டிய நிலைக்கு அதிபர் பொரொஷென்கோ தள்ளப்பட்டுள்ளதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.