உக்ரைனுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கும் நிலையில் புதிய தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கு ரஷ்யா ஆதரவளித்துவரும் விவகாரம் தொடர்பாக ரஷ்யாவின் பெரிய வங்கிகள், எரிசக்தி நிறுவனங்கள், பாதுகாப்பு உபகரண நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்க அரசு தடைகளை விதித்துள்ளது.
ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் கூடுதல் தடைகளை விதித்த சில மணி நேரங்களில் அமெரிக்காவும் இந்தத் தடைகளை அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பெர் வங்கிக்கு 30 நாட்களுக்கு மேற்பட்ட காலகட்டத்திற்கு அமெரிக்க குடிமக்கள் யாரும் கடனளிக்கக் கூடாது என தடைவிதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் அரசுக்கும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருக்கும் நிலையில் இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அமைதிக்கான நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால், தடைகள் தளர்த்தப்படும் என அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் அறிவித்துள்ளன.
முன்னதாக, ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் விதித்த புதிய தடைகள் இன்று அமலுக்கு வந்தன. இதன் மூலம் அந்நாட்டின் ஐந்து தேசிய வங்கிகளுக்கு கடன் வழங்குவது, ரஷ்யாவின் எண்ணை நிறுவனங்கள், பாதுகாப்பு உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் வர்த்தக உறவு வைத்துக்கொள்வது ஆகியவற்றுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்திலேயே இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
ரஷ்யாவும் பதிலடி
இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கத் தயாராகிவருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதியாகும் கார்களுக்கு தடைவிதிக்கப்படலாம் என ரஷ்ய உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு உக்ரைன் பகுதியில் ரஷ்யா ஆயுதம் ஏந்திய 1,000 துருப்புக்களை நிறுத்திவைத்திருப்பதாக நேட்டோ தெரிவித்துள்ளது.
டாங்குகள் உள்பட, அதிநவீன ஆயுதங்களுடன் எல்லை தாண்டி வீரர்களை அனுப்புவதன் மூலம் உக்ரைனின் டோனெட்ஸ்க், லுஹான்ஸ்க் பிராந்தியங்களில் இருக்கும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கு ரஷ்யா நேரடியாக உதவுவதாக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்ய அரசு மீது குற்றம் சாட்டியுள்ளன. ஆனால் ரஷ்ய அரசு இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது.
உக்ரைனுக்குள் நிறுத்தியிருக்கும் துருப்புகள் தவிர, உக்ரைனிய எல்லைக்கு அருகிலும் ரஷ்யா 20,000 துருப்புக்களைக் குவித்திருப்பதாக நேட்டோ கூறுகிறது.
கிழக்கு உக்ரைனில் பிரிவினைவாதிகள் சமீபத்தில் மேலும் பல இடங்களில் முன்னேறியுள்ளனர். ஏப்ரல் மாதத்தலிருந்து நடக்கும் இந்த மோதலில் இதுவரை 3,000 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
ஐரோப்பிய ஒன்றியம் தற்போது விதித்திருக்கும் புதிய தடையில் 24 ரஷ்ய அதிகாரிகள், பிரிவினைவாதத் தலைவர்கள் மீதான தடையும் அடங்கும். இவர்கள் விசா மறுப்பு, ஐரோப்பிய ஒன்றியத்திலிருக்கும் சொத்துக்கள் முடக்கப்படுவது போன்றவைக்கு உள்ளாவார்கள்.
ஐரோப்பிய யூனியன் விதித்திருக்கும் தடை பற்றிய செய்தி வெளியானவுடன் ரஷ்ய நாணயமான ரூபிளின் மதிப்பு வெகுவாகக் கீழிறங்கியது. -BBC