இபோலா: “வெளிநாட்டு இராணுவங்கள் உதவ முன்வர வேண்டும்”

ebolaAமேற்கு ஆப்பிரிக்காவில் உயிர்க்கொல்லியான இபோலா நோய் பரவிவருவதைக் கட்டுப்படுத்துவதில் வெளிநாட்டு இராணுவங்கள் உதவ முன்வர வேண்டும் என எல்லைகளற்ற மருத்துவர்கள் என்ற தொண்டு நிறுவனம் சக்திமிக்க கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.

இபோலாவைக் கட்டுப்படுத்துவதற்காக களத்தில் முன்னின்று செயலாற்றுகின்ற இந்த அமைப்பு, மேற்கு ஆப்பிரிக்காவில் எழுந்துள்ள சூழ்நிலையால் திணறிவருவதாகக் கூறுகிறது.

வெளிநாடுகள் உடனடியாக இராணுவத்தினரையும், மருத்துவ உதவிக் குழுக்களையும் அனுப்பி நோயைக் கட்டுப்படுத்த வேண்டிய அளவுக்கு மோசமான சூழ்நிலை காணப்படுவதாக அது தெரிவித்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்காவில் இபோலாவால் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை ஏற்கனவே இரண்டாயிரத்து ஐநூறைத் தாண்டியுள்ளது.

இபோலா நோய் பரவியுள்ள நாடுகளில் ஒன்றான லைபீரியாவில், பாதிக்கப்பட்ட மக்கள், தம்மிடம் இருந்து குடும்பத்தாருக்கு இந்தக் கிருமி பரவக்கூடாது என்ற அக்கரையில், மருத்துவமனைக்கு தாங்களாகவே வந்து கதவைத் தட்டும் அளவுக்கு மோசமான சூழ்நிலை இருப்பதாக மெத்ஸன் சான் ஃபிரான்தியே என்ற இந்த அமைப்பு கூறுகிறது.

ஆனால் அந்த நோயாளிகளை சேர்த்துக்கொள்ள படுக்கைகள் இல்லாததால் மருத்துவர்கள் அவர்களைத் திருப்பி அனுப்ப வேண்டிய அவல நிலை காணப்படுவதாக அது தெரிவிக்கிறது.

மருத்துவமனைகளில் இடமில்லாத அவல நிலையை நோயாளிகள் எதிர்கொள்கின்றனர்
மருத்துவமனைகளில் இடமில்லாத அவல நிலையை நோயாளிகள் எதிர்கொள்கின்றனர்

 

மருத்துவமனையில் சேர முடியாமல் நோயாளிகள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதால், அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு தொடர்ந்து நோய் பரவுகின்ற அபாயகரமான சூழல் நிலவுகிறது.

நிலைமையை சமாளிக்க முடியாமல் திணறிவருவதாக எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு கூறுகிறது.

இந்தச் சூழலில்தான், வெளிநாடுகள் தமது படையினரையும், மருத்துவ குழுக்களையும் மேற்கு ஆப்பிரிக்கா அனுப்பி இபோலாவைக் கட்டுப்படுத்த உதவ வேண்டும் என அது கோரியுள்ளது.

உடனடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என்றால், இந்த நோயால் உயிரிழக்க நேரிடுவோரின் எண்ணிக்கை பத்தாயிரங்கள் கணக்கில் இருக்கும் என உலக சுகாதார நிறுவனமும் எச்சரித்துள்ளது.

அனைத்து தரப்பிலிருந்தும் உதவியும் ஒத்துழைப்பும் வேண்டும் என இபோலா சம்பந்தமான ஐநா ஒருங்கிணைப்பாளர் டேவிட் நபார்ரோ கூறினார்.

அரசங்கங்கள், சர்வதேச அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், சிவில் சமூகக் குழுக்கள், வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள் குறிப்பாக உலக வங்கி, ஆப்பிரிக்க வங்கி போன்றவை, தனியார் கொடையாளிகள், அறக்கட்டளைகள் என எல்லா தரப்புகளும் ஒன்றிணைந்து மிகப்பெரிய நடவடிக்கையை முன்னெடுத்தால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

இதனிடையே இபோலாவை கட்டுப்படுத்துவது தொடர்பில் மேற்கு ஆப்பிரிக்காவுக்கு மூவாயிரம் துருப்பினரை அனுப்புவதாக அமெரிக்காவின் அதிபர் அலுவலகம் அறிவித்துள்ளது. -BBC