ஸ்காட்லாந்து: ஆரம்ப முடிவுகளில் ‘பிரியவேண்டாம் அணி’ முன்னிலை

ஸ்காட்லாந்து கருத்தறியும் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது .

ஸ்காட்லாந்து சுதந்திரம் குறித்த கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவுகள் வரத்தொடங்கியிருக்கின்றன.

இது வரை முடிவுகள் வெளிவந்த நான்கு உள்ளூராட்சிப் பிரதேசங்களிலும், பிரிட்டனிடமிருந்து ஸ்காட்லாந்து பிரிய வேண்டாம் என்ற அணி வென்றிருக்கிறது.

ஸ்காட்லாந்தில் இருக்கும் 32 உள்ளூராட்சிப் பிரதேசங்களில் ( கவுண்ட்டிகள்) ஒன்றான கிளாக்மேன்னன்ஷையரில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி உள்ளன.
இந்த வாக்குப் பதிவில், ஸ்காட்லாந்து பிரிட்டனுடனேயே இருக்க வேண்டும் என்று 19,036 பேரும் , ஸ்காட்லாந்து சுதந்திரம் பெற வேண்டும் என்று 16,350 பேரும் வாக்களித்துள்ளனர்.

ஸ்காட்லாந்து கருத்தறியும் வாக்கெடுப்பில் முதன்முதலாக வாக்கு எண்ணிக்கை முடிவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது இந்த க்ளாக்மேன்னன்ஷையரில்தான்.

இதனையடுத்து, ஆர்க்னி உள்ளுராட்சி பிரதேச வாக்கு எண்ணிக்கையிலும், பிரிட்டனிடமிருந்து பிரிய வேண்டாம் என்ற கருத்துக்கே அதிக வாக்குகள் கிடைத்தன.

ஆர்க்னி தீவுகளில் சுதந்திரம் கோரும் தரப்புக்கு 32.8 சதவீத வாக்குகளும், பிரியவேண்டாம் என்ற தரப்புக்கு 67.2 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன.

ஷெட்லண்ட் தீவுகள் வாக்கு எண்ணிகையிலும் “பிரிய வேண்டாம்” என்ற தரப்புக்கு 63.71 சதவீதமும், சுதந்திரம் கோரும் தரப்புக்கு 36.29 சதவீதமும் வாக்குகள் கிடைத்தன.

கோம்ஹேர்ல் நேன் ஐலியன் சியார் என்ற உள்ளூராட்சி பிரதேசத்திலும், இது போல சுதந்திரத்துக்கு எதிரான தரப்புக்கே 53.42 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.
மற்ற உள்ளூராட்சி பிரதேசங்களில் இரவு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஸ்காட்லாந்து முழுவதுமான ஒட்டு மொத்த வாக்கு எண்ணிக்கை முடிவுகள் பிரிட்டிஷ் நேரப்படி காலை 6.30 மணிக்கு ( இந்திய இலங்கை நேரப்படி 11 மணிக்கு) பின்னர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று வியாழக்க்கிழமை ஸ்காட்லாந்து முழுவதும் நடந்த இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்குப்பதிவில் சுமார் 80 சதவீதத்துக்கு மேலானோர் வாக்களித்துள்ளனர் என்று முன்னதாக வந்த வாக்குப்பதிவு விவரங்கள் தெரிவித்தன.

கருத்தறியும் வாக்கெடுப்பு நடந்து முடிந்த பின்னர் வெளியான யுகவ் நிறுவன எக்ஸிட் வாக்கெடுப்பு ஒன்று பிரிந்து போகவேண்டாம் என்ற தரப்புக்கு 54 சதவீத ஆதரவும், சுதந்திரம் கோரும் தரப்புக்கு 46 சதவீத ஆதரவும் இருப்பதாகக் கூறியது.

வெள்ளிக்கிழமை பின்னதாக பிரிட்டிஷ் மகாராணி எலிசபத் அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. -BBC